சென்னை,பிப்.20; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் கட்சிகளிடையே கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளின் முக்கியத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை போர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைகோவின் விமர்சனம்: ‘கதர் சட்டைகள் கிழிவது சகஜம்’
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதல்கள் குறித்து விமர்சித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரசில் கதர் சட்டைகள் கிழிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல -அது அவர்களுக்கு வழக்கம்தான் என்று கூறியிருந்தார்.மேலும், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் பேச்சுகள் கூட்டணியில் தேவையில்லாத சங்கடங்களை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வைகோவுக்கு மாணிக்கம் தாகூரின் அதிரடிப் பதில்
வைகோவின் இந்த விமர்சனத்திற்கு தனது எக்ஸ் தளத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:
“கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறது. அந்த ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இதையெல்லாம் தாண்டி பொறுமையுடன் கடந்து போகிறேன். இது பயத்தினால் அல்ல அண்ணன் வைகோ அவர்களே!”
இதன் மூலம், கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டிற்கு கட்டுப்பட்டே தான் அமைதி காப்பதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் போட்டி இல்லை?
முன்னதாக, மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், “விருதுநகர் தொகுதியில் இனி நான் போட்டியிட மாட்டேன்” என்று கூறியிருந்தார். இது மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2026 தேர்தலில் தொகுதிகள் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு போன்ற விவகாரங்கள் ஏற்கனவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் வேளையில், இந்த மோதல் கூடுதல் சிக்கலை உருவாக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் புதிய வடிவில் விரிசலா?
திமுக தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்ற கேள்வி எழும் வகையில் தலைவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன. எனினும், காங்கிரஸ் தலைமை தனது நிர்வாகிகளை நிதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ள நிலையில், இந்த வார்த்தை மோதல்கள் சமரசத்தில் முடியுமா அல்லது புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
