டாக்கா,டிச.28; வங்கதேச இளைஞர்கள் மத்தியில் ஒரு தலைவராக உருவெடுத்து வந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி (Sharif Osman Hadi) கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இது இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு மற்றும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
யார் இந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி?
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய ‘இன்குலாப் மஞ்ச்’ (Inquilab Moncho) அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாதி. வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் ஆயத்தமாகி வந்தார்.
உஸ்மான் ஹாதி கொலை சம்பவத்தின் பின்னணி
கடந்த 12ஆம் தேதி டாக்காவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, மர்ம நபர்களால் ஹாதி தலையில் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வங்கதேசம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவுக்கு தப்பிய கொலையாளிகள்?
டாக்கா மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கொலையில் நேரடியாகத் தொடர்புடைய ஃபைசல் கரீம் மசூத் (Faisal Karim Masud) மற்றும் ஆலம்கீர் ஷேக் (Alamgir Sheikh) ஆகிய இரண்டு பேர் மேகாலயா மாநிலத்திற்குள் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் ஹாலுவாகாட் (Haluaghat) எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்கு உதவிய ‘புர்தி’ மற்றும் ‘சாமி’ என்ற இருவரை இந்திய அதிகாரிகள் ஏற்கனவே பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பியோடிய இரண்டு பேரையும் முறையாக கைது செய்து வங்கதேசத்திற்கு கொண்டுவர இந்திய அதிகாரிகளுடன் வங்கதேச அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உஸ்மான் ஹாதி கொலை வழக்கு; விசாரணையின் நிலை என்ன?
இந்தக் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், இதில் 218 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உஸ்மான் ஹாதி கொலையால் வங்கதேச அரசியலில் அதிர்ச்சி
ஷெரீப் உஸ்மான் ஹாதியின் மரணம் வங்கதேச அரசியலில் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கொலையாளிகளைப் பிடிப்பதில் இந்திய மற்றும் வங்கதேச காவல்துறையினர் இணைந்து செயல்படுவது, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
