Skip to content

49ஆவது சென்னை புத்தகக் காட்சி: அறிவின் சங்கமத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை,ஜன.09; அறிவின் சங்கமம் என்றழைக்கப்படும் சென்னை புத்தகக் காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னையின் மிக முக்கியமான கலாசார நிகழ்வுகளில் ஒன்றான 49ஆவது புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (08.01.2026) கோலாகலமாகத் தொடங்கியது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) சார்பில் ஒருங்கிணைக்கப்படும் இந்த அறிவுத் திருவிழா, புத்தகப் பிரியர்களுக்கு இந்த ஆண்டு பெரும் ஆச்சரியங்களை அளித்துள்ளது.

1000-க்கும் மேற்பட்ட அரங்குகள்: ஒரு சாதனைப் பயணம்

இந்த ஆண்டு புத்தகக் காட்சி வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 428 தமிழ் பதிப்பகங்கள், 256 ஆங்கிலப் பதிப்பகங்கள் எனப் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் அணிவகுக்கின்றன. இது குறித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழக சமூகம் அறிவுச் சமூகமாக உலக அரங்கில் மதிக்கப்பட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்” என்று குறிப்பிட்டார்.

முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்

இலவச அனுமதி: இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பாக, புத்தகக் காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் பொற்கிழி விருதுகள்: தொடக்க விழாவில், சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகளை’ முதலமைச்சர் வழங்கினார்.

புதுமையான முயற்சிகள்: முதன்முறையாக திருநங்கைகளால் நடத்தப்படும் ‘குயர்’ (Queer) பதிப்பகத்திற்குத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கெனத் தனிப்பிரிவு மற்றும் ஜப்பானிய மொழி புத்தகங்களுக்கான அரங்குகள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன.

சிறப்புச் சலுகை: விற்பனை செய்யப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 10 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பார்வையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு

பார்வையாளர்களின் வசதிக்காக சைதாப்பேட்டை மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் இருந்து சிற்றுந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மைதானம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு, இலவச வைஃபை (Wi-Fi), மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள் மற்றும் முதியோருக்கான சக்கர நாற்காலி வசதிகள் என அனைத்து அடிப்படைத் தேவைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் சென்னை புததகக்காட்சி

ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சி, வெறும் புத்தக விற்பனை இடமாக மட்டுமன்றி, நாள்தோறும் நடைபெறும் இலக்கியக் கூட்டங்கள் (சிந்தனை அரங்கம்) மூலம் அறிவார்ந்த விவாதங்களுக்கான தளமாகவும் திகழ்கிறது. “புத்தகங்களை நேசிப்போம், அறிவை வளர்ப்போம்” என்ற தாரக மந்திரத்தோடு சென்னை இப்போது ஒரு மாபெரும் நூலகமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *