Skip to content

95% பாமக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்: கட்சியின் பொதுக்குழுவில் ராமதாஸ் பேச்சு!

சேலம்,டிச.30: பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சித் தலைவராகவும், கௌரவத் தலைவராக ஜி.கே.மணியையும், செயல் தலைவராக ஸ்ரீகாந்தியையும் தேர்ந்தெடுத்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், கூட்டணி அமைக்க ராமதாஸுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெற்றிக் கூட்டணி அமைப்போம்

பொதுக் குழுவில் பேசிய ராமதாஸ், “இந்த நேரத்தில் எதைப் பேசி, எதை விடுவது என எனக்குள்ளே ஒரு குழப்பம். ஏனென்றால், எனக்கு இருக்கிற ஆதங்கத்தைக் கொட்டி, உங்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த அவகாசம் போதாது. இந்த பொதுக்குழுவில் கூட்டணி குறித்து எதிர்பார்த்து வந்திருப்பீர்கள். நீங்கள் ஊர் திரும்பியதும் எந்த கூட்டணி என்று யாராவது கேட்டால், பாமக அமைக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிக் கூட்டணியாகவே இருக்கும் என்று சொல்லுங்கள்.

பாமகவினர் நான் வளர்த்த பிள்ளைகள் எனப் பேச்சு

ஒரு குழு, ஒரு கூட்டம், ஒரு கும்பல்; அவர்கள் எல்லாம் நான் வளர்த்த பிள்ளைகள்; நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள்; நான் சரியாக வளர்க்கவில்லை; அப்படி வளர்த்திருந்தால் என்னை முதுகில், மார்பில் குத்தியிருக்கமாட்டார்; இப்போது என்னையும், ஜி.கே.மணியையும் தூற்றுகிறார்கள். இதனால், நொந்து போன ஜி.கே.மணி, ‘ஒன்று நான் காணாமல் போகணும். இல்லையென்றால் சாகத்தான் வேண்டும். 30 ஆண்டுகளாகக் கட்சிக்கு உழைத்தற்கு இதுதான் நிலையா?’ எனக் கூறியதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. இப்போது என்னையும் நேரடியாக தாக்கத் தொடங்கி விட்டார்கள்.

95% பேர் என் பின்னால் உள்ளனர்; உனக்குப் பின்னால் யார்…?

இப்போது நடந்து வரும் இந்த செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவையெல்லாம் பார்க்கும் போது, 100-க்கு 95 விழுக்காடு தொண்டர்கள் என் பின்னால் தான் இருக்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 விழுக்காடு தொண்டர்கள் கூட இல்லை. ஆனால், லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்து பம்மாத்து வேலை செய்து வருகிறார்; அது ஒரு போதும் பலிக்காது; இந்த மக்கள், என் பின்னால் பல ஆண்டுகளாக இருக்கிறார்கள்; அவர்கள் என்னை ஒரு போதும் கைவிட்டதில்லை; உனக்கு யார் இருக்கிறார்? என ராமதாஸ் ஆவேசமாகப் பேசினார்.

நான் எந்த பதவிக்கும் இதுவரை ஆசைப்பட்டதில்லை. அப்படி ஆசைப்பட்டிருந்தால், இந்திய அளவில் பெரிய பதவிகளுக்கு போயிருப்பேன். உனக்கு என்ன குறை வைத்தேன்? என்னைப் போல ஒரு தகப்பன் உலகில் வேறு யாருக்காவது கிடைப்பார்களா? அன்புமணியை நினைத்தால், சில நேரங்களில் தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை.

“தூக்கம் வருவதில்லை; ஆனால், பாமக சொந்தங்களை நினைத்தால் உறங்கிவிடுவேன்”

ஆனால், என்னுடைய சொந்தங்களை நினைக்கும் போது தூங்கி விடுகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேர் என்னை சந்திப்பதால் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. இந்த தேர்தலில், அன்புமணிக்கு சரியான பாடம் புகட்டுவோம். வரும் 2026 தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்போம்” என்று ராமதாஸ் பேசினார்.

முன்னதாக, அன்புமணி குறித்து பேசும் போது மேடையிலேயே ராமதாஸ் கண்கலங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது “அழ வேண்டாம்” என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *