Skip to content

விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ஆவது இடம்; தவெக அரசுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!

சென்னை,மே.11; முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆவதாக பாடப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் அரசு விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவது சுமார் 60 ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பதவியேற்பு விழாவில் 3ஆவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

ஆனால், தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (மே 10, 2026) பதவியேற்ற விழாவில், முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆவது பாடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சிறுமை: திமுக கண்டனம்

இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் மரபை உடைத்து தமிழ்த்தாய் வாழ்த்து சிறுமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மரபை மீறிய நிகழ்வு: வைகோ கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் வந்தே மாதரம் பாடப்பட்டது தமிழ்நாட்டின் மரபை மீறிய நிகழ்வாகும். தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

முதலமமைச்சரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடும் நடைமுறை பின்பற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஆளுநரின் விருப்பப்படி 3ஆவது இடமா? என திருமாவளவன் கேள்வி

விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆவதாக பாடப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பதவியேற்பு நிகழ்வில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது; வழக்கமாக, அரசு விழாக்களின்போது தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்தினை’ ஒலிக்கச் செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஓர் மரபாகும்; ஆனால். இன்று அம்மரபினை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாகப் பாடியுள்ளனர்;

அதாவது, வழக்கத்திற்கு மாறாக ‘வந்தே மாதரம்’ பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே, கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடியுள்ளனர்; இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது; இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை; மாறாக, ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்தப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது; இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டின் அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தொடக்கத்திலேயே பாட முதலமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்பாட்டுப் படையெடுப்பு என கி.வீரமணி கண்டனம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘வந்தே மாதரம்’ பாடல் சமஸ்கிருத, ஹிந்தி மொழிப் படையெடுப்பின் படையெடுப்பு ஆகும்; அதைவிட, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல’, நம் மொழி செம்மொழித் தமிழ் வாழ்த்தாம் ‘‘நீராரும் கடலுடுத்த’’ பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சம் கொதிக்கிறது!

இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆதவ் அர்ஜூனா விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாய்த் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடுவதில் தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடு இல்லை;

இதுகுறித்து ஆளுநரிடம் வலியுறுத்தியபோது ஒன்றிய அரசின் அறிக்கையின்படி செயல்படும் பொறுப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்றும் ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *