Skip to content

மேற்கு வங்க முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் படுகொலை வழக்கு; பீகார்-உ.பி.எல்லையில் 3 பேர் கைது!

கொல்கத்தா, மே.11; மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கைது செய்துள்ளது. பீகார் மற்றும் உத்தரபிரதேச எல்லைப் பகுதியில் வைத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொலை பின்னணி மற்றும் விசாரணை

கடந்த 6ஆம் தேதி இரவு, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்யம்கிராம் பகுதியில் சந்திரநாத் ரத் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்த கொலையாளிகள், மிகத் துல்லியமாக இந்தத் தாக்குதலை நடத்தினர். இந்தச் சம்பவத்தில் சந்திரநாத்தின் கார் ஓட்டுநர் புத்ததேவ் பேரா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது நடவடிக்கை

இந்தக் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), சுங்கச்சாவடிகளில் செலுத்தப்பட்ட யூபிஐ (UPI) கட்டண ரசீதுகளை வைத்து கொலையாளிகள் தப்பிச் சென்ற வாகனத்தைக் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் சென்ற போலீசார், மாயங்க் சர்மா, விக்கி சிங் மற்றும் ராஜ்பீர் சிங் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும் 2 பேர் விசாரணைக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மாயங்க் சர்மா என்பவர், கொலைக்கு முன்னதாக அப்பகுதியை நோட்டமிட்டதாக (Recce) போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அரசியல் சூழல்

மேற்கு வங்கத்தின் 9ஆவது முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிமாநில கூலிப்படையினர் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கு காரணம் என்ன? பின்னணியில் இருப்பவர்கள் யார்?

சந்திரநாத் ரத் கொலை வழக்கு மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொழில்நுட்ப ஆதாரங்களைக் கொண்டு கொலையாளிகளை விரைந்து பிடித்த போலீசாரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. எனினும், இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது விசாரணை முடிவிலேயே தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *