சென்னை,மே.11; தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜய் நேற்று (மே 10, 2026) முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்!
இந்த சூழலில், விஜய் இன்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மு.க. ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார். அப்போது அவர்கள் சுமார் பத்து நிமிடங்களுக்கு உரையாடினர்.
விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னை சந்தித்தார்: மு.க.ஸ்டாலின்
இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய்
இதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு விஜய் சென்றார் . அப்போது விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்றார். வைகோவுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற நிலையில், பதிலுக்கு வைகோவும் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.
இதனையடுத்து முதலமைச்சர் ஜோசப் விஜய், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார். இதன் பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர். அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். அதன்பின்னர் ஜோசப் விஜய்யை வைகோ காரில் வழியனுப்பி வைத்தார்.
பாமக தலைவர் அன்புமணியை சந்தித்தார் விஜய்!
வைகோவை சந்தித்த பின்னர் முதலமைச்சர் விஜய், பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, அன்புமணி வாசலுக்கே வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணியும் ஜோசப் விஜய்யை வரவேற்று உபசரித்தார்.
ஒருவருக்கொருவர் பூங்கொத்து கொடுத்து மரியாதை
அன்புமணிக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அன்புமணியும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் விஜய், அன்புமணியுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்னர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சீமானிடம் வாழ்த்துப் பெற்றார் முதலமைச்சர் விஜய்
பின்னர் ஜோசப் விஜய் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதலமைச்சர் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.
தமிழ்நாடு அரசியலில் வியந்து பார்க்கப்படும் விஜய்யின் செயல்
சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார். ஜோசப் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார்.
மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது தமிழ்நாடு அரசியலில் வியந்து பார்க்கப்படுகிறது.
