Skip to content

பிரதமரின் அறிவுரைக்கு டி.கே.சிவகுமார் பதிலடி; தங்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு யார் காரணம்?

பெங்களூரு,மே.12; கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பேச்சுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறும் பிரதமர் மக்களுக்கு வழங்கிய அறிவுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

விலை உயர்வின் பின்னணி என்ன?

பெங்களூருவில் நேற்று (மே 11, 2026) செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், அடுத்த ஒரு ஆண்டிற்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்றும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். “மக்களுக்கு அறிவுரை வழங்கும் பிரதமர், தங்கம் மற்றும் எரிபொருள் விலை ஏன் இவ்வளவு உயர்ந்துள்ளது என்பதையும், இந்த விலை உயர்வுக்கு யார் பொறுப்பு என்பதையும் விளக்க வேண்டும்” என்று சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

மக்களின் கலாச்சாரத் தேவைகள்

இந்திய கலாச்சாரத்தில் தங்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “திருமண விழாக் கொண்டாட்டங்களில் தங்கம் வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கூற முடியுமா? கஷ்ட காலத்திலும் சரி, மகிழ்ச்சியான நேரத்திலும் சரி, மக்கள் தங்கத்தை ஒரு முதலீடாகவே பார்க்கிறார்கள். அதன் மீது கடன் பெற்று தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். இத்தகைய சூழலில் பிரதமரின் அறிவுரை நடைமுறைக்குச் சாத்தியமற்றது” என்று தெரிவித்தார்.

மேலும், கொரோனா காலத்தில் பிரதமர் விளக்கேற்றச் சொன்னதையும், கைதட்டச் சொன்னதையும் நினைவு கூர்ந்த சிவகுமார், அத்தகைய செயல்கள் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்று சாடினார்.

“சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” – பொதுப்போக்குவரத்து சர்ச்சை

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சிவகுமார், “முதலில் மத்திய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். பாடம் நடத்துவதற்கு முன்னால் நாம் அதைச் செயல்படுத்தி முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்தத் தியாகத்தை முதலில் மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில அதிகாரிகள் மற்றும் அக்கட்சித் தொண்டர்கள் தொடங்கட்டும். அதன் பிறகு மக்களுக்கு அறிவுரை வழங்கலாம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துங்கள் பிரதமரே!!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளச் சொல்வது ஏற்புடையதல்ல என்பதே கர்நாடக துணை முதலமைச்சரின் கருத்தின் சாரமாக உள்ளது. எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு சாமானிய மக்களைப் பாதித்துள்ள நிலையில், இந்த அரசியல் மோதல் மேலும் சூடுபிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *