Skip to content

நீட் தேர்வு ரத்து விவகாரம்; தேசிய தேர்வு முகமையை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

டெல்லி,மே.13; மருத்துவப் படிப்புக்கான நீட்-யுஜி (NEET-UG 2026) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமையை (NTA -National Testing Agent) மாற்றக் கோரியும், நீதிமன்ற மேற்பார்வையில் மறுதேர்வு நடத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறையான விசாரணையும் என்டிஏ-வின் தோல்வியும்

அனைத்திந்திய மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு (FAIMA) சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமை (NTA) முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் வினாத்தாள்கள் கசிந்தது ஒரு “அமைப்பு ரீதியான தோல்வி” (Systemic Failure) என்று மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மனுவில் உள்ள முக்கிய கோரிக்கைகள்:

என்டிஏ-வை மாற்ற வேண்டும்: தேசிய தேர்வு முகமைக்குப் (NTA)-பதிலாக மிகவும் வலுவான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் தன்னாட்சி பெற்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்;

நீதிமன்ற மேற்பார்வையில் மறுதேர்வு: ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், சைபர் கிரைம் மற்றும் தடயவியல் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவின் கண்காணிப்பில் நீட் மறுதேர்வை நடத்த வேண்டும்.

சிபிஐ அறிக்கை: வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணையின் தற்போதைய நிலையை (Status Report) 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

தொழில்நுட்ப மாற்றங்கள்: வினாத்தாள்களுக்கு ‘டிஜிட்டல் லாக்கிங்’ (Digital Locking) வசதி மற்றும் காகித முறையிலிருந்து கணினி வழித் தேர்வுக்கு (Computer Based Test) மாறுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களின் நலன் மற்றும் வெளிப்படைத்தன்மை

சுமார் 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் இந்தத் தேர்வை நம்பியுள்ள நிலையில், தேர்வு முடிவுகளை மையம் வாரியாக (Centre-wise results) வெளியிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் நடந்த மையங்களை எளிதில் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகள் மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளன. உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து வழங்கும் தீர்ப்பு, எதிர்காலத்தில் இது போன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், மாணவர்களுக்கு நீதி கிடைக்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *