சென்னை,மே.13; அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (மே 13, 2026) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அதிமுகவுக்கு சில எம்எல்ஏக்கள் துரோகம் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். கொறடா உத்தரவை மீறி சட்டத்திற்குப் புறம்பாக தவெக அரசுக்கு வாக்களித்துள்ளனர் என்று சாடினார்.
6 அமைச்சர்கள், 10 வாரியத் தலைவர்கள் பதவி என பேரம்!
6 அமைச்சர்கள் மற்றும் 10 வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசியிருக்கிறது, அதனால் அவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று பழனிசாமி கூறினார்.
ஜெயலலிதா புகழைச் சொல்லித்தான் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றோம் – சில அமைச்சர்கள் அதிமுகவுக்கு விசுவாசமின்றி துரோகம் இழைக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இதுதான் தூய்மையா?: தவெகவுக்கு இபிஎஸ் கேள்வி
தூய்மையான ஆட்சி நடத்தப் போவதாக கூறும் முதலமைச்சர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு நிலவும்போது ஒரு தரப்பினரை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்? இதுதான் தூய்மையா? அனைத்து இயக்கங்களுக்கும் சோதனை வருவதுண்டு- பிரிவும் வரும்;
ஆனால், எந்தத் தவைரும் பிரிந்தவர்களின் இல்லங்களுக்குச் சென்றது கிடையாது; தொடக்கத்திலேயே தவறான பாதைக்குச் செல்கிறார் தவெக விஜய்; இது தவறான முன்னுதாரணமாகும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திமுகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டேனா? : இபிஎஸ் பதில்
திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி திட்டமிட்டதாக சி.வி.சண்முகம் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து இபிஎஸ்-சிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், பரப்புரை முழுவதும் தான் திமுகவை எதிர்த்தே பேசினேன்; அதிமுக உருவானதே திமுகவை எதிர்த்துதான்; தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையில் தவறான தகவல்களை பேசுகின்றனர்;
கட்சியின் அதிகாரம் என்னிடம் தான் உள்ளது: இபிஎஸ்
நூற்றுக்கு நூறு விழுக்காடு திமுகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை; பெரும்பான்மை சிறுபான்மை என்பது இப்போது முக்கியமில்லை; யார் பொதுச் செயலாளர் என்பது தான் இங்கு முக்கியம்; கட்சியின் அதிகாரம் தற்போது என்னிடம் தான் உள்ளது;
கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு தான் இருக்கிறது; சட்டப்பேரவையில் விதி, மரபு பின்பற்றப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
