சென்னை,மே.14; தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நட்சத்திர வேட்பாளர்களாக அறியப்பட்டவர்களின் தோல்வி மற்றும் வாக்கு வங்கி சரிவு ஆகியவை குறித்து டெல்லி மேலிடம் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது.
அதிர்ச்சியில் தேசிய தலைமை
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களை வென்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதைவிட கூடுதலாக 2 இடங்களில், அதாவது 27 தொகுதிகளில் களம் கண்ட பாஜக கட்சியால், ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து தீவிர பரப்புரை மேற்கொண்ட போதிலும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை.
முக்கிய வேட்பாளர்களின் வீழ்ச்சி
பாஜகவின் பலமான முகங்களாகக் கருதப்பட்ட மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (சாத்தூர் தொகுதி), டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் போன்ற முன்னணி தலைவர்களால்கூட இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இது கட்சித் தொண்டர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வு செய்ய குழு அமைப்பு
கடந்த (2024ஆம் ஆண்டு) நாடாளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, வாக்கு சதவீதத்தை உயர்த்திய பாஜக, இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏன் இவ்வளவு பெரிய சரிவைச் சந்தித்தது என்பது குறித்து ஆராய தனிக்குழு ஒன்றை அமைக்க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. இக்குழு தோல்விக்கான காரணங்களை அடிமட்ட அளவில் ஆய்வு செய்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்.
தலைமை மாற்றமா?
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைமையில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாநிலத் தலைவர் பொறுப்பில் மாற்றம் வரக்கூடும் என்ற தகவல் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை மீண்டும் தலைவராக்கப்படலாம் எனப் பேசப்படுகின்றது. “தோல்வி குறித்த ஆய்வு என்பது கட்சியின் வளர்ச்சிக்கு அவசியமானது” என கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்பை அறிந்துகொள்வதில் பாஜக எங்கே தவறியது? கூட்டணி பலம் கைகொடுக்காதது ஏன்? போன்ற கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு அறிக்கைக்குப் பிறகு தமிழ்நாடு பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
