Skip to content

இந்தியா ஏ அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி; சீனியர் அணியில் நுழைய ஒரு படி தூரமே!

டெல்லி,மே.15; இந்திய கிரிக்கெட்டின் அடுத்த “சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, இந்திய சீனியர் அணியில் இடம்பிடிப்பதற்கான மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளார். ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான ‘இந்தியா-ஏ’ அணியில் இந்த இளம் வீரரை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) சேர்த்துள்ளது.

‘இந்தியா-ஏ’ அணியில் இளம் புயல்

சமீபகாலமாக கிரிக்கெட் உலகில் பெரும் பேசுபொருளாக இருப்பவர் வைபவ் சூர்யவன்ஷி. தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

திலக் வர்மா தலைமையிலான ‘இந்தியா-ஏ’ அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது, அவர் விரைவில் இந்திய சீனியர் அணியில் விளையாடுவதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. வழக்கமாக, ஒரு வீரர் இந்திய சீனியர் அணிக்கு செல்வதற்கு முன் ‘இந்தியா-ஏ’ அணிக்காக விளையாடி திறமையை நிரூபிப்பது வழக்கம். அந்த வகையில், வைபவ் இப்போது சீனியர் அணிக்கு ஒரு படி அருகில் உள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணத்தின் விவரங்கள்

ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறும் இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ ஆகிய அணிகள் மோதவுள்ளன. தம்புல்லேவில் நடைபெறும் இந்த வெள்ளைப் பந்து (White-ball) தொடருக்குப் பிறகு, காலே மைதானத்தில் இரண்டு போட்டிகளும் (Multi-day matches) நடைபெறவுள்ளன.

இந்தியா-ஏ ஒருநாள் அணி: திலக் வர்மா (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (துணை கேப்டன்), ஆயுஷ் பதோனி, பிரப்சிம்ரன் சிங், நிஷாந்த் சிந்து மற்றும் பலர்.

அஷ்வினின் கணிப்பு பலிக்கிறதா?

முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்களுக்கு நேரடியாக சீனியர் அணியில் வாய்ப்பளிப்பதை விட, ‘இந்தியா-ஏ’ அல்லது முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து தெரிவித்திருந்தார். கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தற்போதைய முடிவு அஷ்வினின் கருத்தை வழிமொழிவது போல் அமைந்துள்ளது.

இந்திய நீல நிறை சீருடையில் விரைவில் வலம் வருவார் சூர்யவன்ஷி!

அடுத்த சில மாதங்களில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

மிகச் சிறிய வயதிலேயே உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை ஐபிஎல் தொடரில் எதிர்கொண்ட வைபவ், இப்போது சர்வதேச தரத்திலான ‘ஏ’ அணி போட்டிகளில் விளையாடத் தயாராகிவிட்டார். இந்த இலங்கை தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், வெகு விரைவில் இந்திய நீல நிற சீருடையில் (சீனியர் அணி) அவரை நாம் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *