Skip to content

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: கேள்வித்தாள் தயாரித்த குழுவில் இருந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கைது!

லாத்தூர்.மே.16; மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ நீட் தேர்வு (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு வழக்கில் மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. நீட் தேர்வுக்கான வினாத்தாளைத் தயாரிக்கும் தேசிய தேர்வு முகமையின் (NTA) நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி (PV Kulkarni) என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த பேராசிரியர் குல்கர்னி?

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள பி.வி. குல்கர்னி, கல்வித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த பேராசிரியர் ஆவார். மிக முக்கியமாக, நீட் தேர்வுக்கான வினாத்தாள்களை வடிவமைக்கும் தேசிய தேர்வு முகமையின் (NTA) உயர்மட்டக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்துள்ளார். இதனால் வினாத்தாள் தயாரிப்பு மற்றும் அதன் ரகசிய விவரங்கள் அனைத்தும் இவருக்கு முன்கூட்டியே தெரியவந்தது.

வீட்டிலேயே ரகசிய பயிற்சி வகுப்பு: அம்பலமான மோசடி

சிபிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, வினாத்தாளைப் பெற்ற பேராசிரியர் குல்கர்னி, அதை முதலில் உள்ளூரில் விற்க முயன்றுள்ளார். ஆனால், அது உண்மையான வினாத்தாள் தான் என்பதை வாங்குபவர்களால் நம்ப முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புனேயில் உள்ள தனது இல்லத்தில் மணிஷா வாக்மரே (Manisha Waghmare) என்பவரின் உதவியுடன் மாணவர்களைத் திரட்டி ஒரு ரகசிய பயிற்சி வகுப்பை நடத்தியுள்ளார். அந்த வகுப்பில், பின்னர் வரவிருந்த நீட் தேர்வின் வேதியியல் வினாக்கள், அதற்கான ஆப்ஷன்கள் மற்றும் சரியான விடைகள் ஆகியவற்றை மாணவர்களிடம் அவர் நேரடியாகக் கூறி எழுத வைத்துள்ளார்.

தேர்வுக்குப் பிறகு மாணவர்களின் குறிப்பேடுகளை (Notebooks) ஆய்வு செய்த சிபிஐ, அதில் எழுதப்பட்டிருந்த கேள்விகளும், மே 3ஆம் தேதி தேர்வில் கேட்கப்பட்ட நீட் தேர்வு வினாத்தாளும் 100% துல்லியமாக ஒத்துப்போயிருப்பதை உறுதி செய்துள்ளது.

இடைத்தரகர்களும் வங்கிப் பரிமாற்றங்களும்

இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புனேயில் அழகுநிலையம் நடத்தி வரும் மணிஷா வாக்மரே, மாணவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார். தேர்வு நடப்பதற்கு முன்னதாக இவரது வங்கிக் கணக்குகளுக்குப் பல லட்ச ரூபாய் பணம் வந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். புனேயில் கன்சல்டன்சி நடத்தி வரும் தனஞ்சய் லோகண்டே என்ற ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிக்கும் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீட் பயிற்சி மையங்கள் மீதான சிபிஐ வளையம்

முந்தைய வினாத்தாள் கசிவு வழக்குகளைப் போல இல்லாமல், இந்த முறை தேர்வு அமைப்பின் மிக முக்கியப் பொறுப்பில் உள்ளவரே இதில் நேரடியாகப் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற பயிற்சி மையமாக விளங்கும் லாத்தூரில் உள்ள ஒரு முன்னணி பயிற்சி மையத்தின் இயக்குநரிடமும் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியுள்ளது. அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையில் (NTA) வினாத்தாள் சீல் வைக்கப்படுவதற்கு முன்பு, அதனை அணுகும் அதிகாரம் கொண்ட அனைத்துப் பேராசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பாட நிபுணர்களின் பட்டியலைக் கோரி சிபிஐ இப்போது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலேயே ஊழல்

இலட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவையும், நாட்டின் மிக உயரிய மருத்துவ நுழைவுத் தேர்வின் நம்பகத்தன்மையையும் இந்த வினாத்தாள் கசிவு கேள்விக்குறியாக்கியுள்ளது. வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலேயே ஊழல் புகுந்திருப்பது தேர்வு முறையில் உள்ள மிகப்பெரிய துவாரத்தைக் காட்டுகிறது.

சிபிஐ-யின் இந்த அதிரடி நடவடிக்கை, இதன் பின்னணியில் உள்ள மற்ற பெரிய புள்ளிகளையும், அதிகாரிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த வினாத்தாள் முறைகேடு காரணமாக மே 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *