கௌகாத்தி,மே.18; இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் சூர்யகுமாரின் (Surya Kumar Yadav) அந்தப் பதவியில் நீடிப்பாரா? என்பது குறித்து முக்கிய முடிவெடுப்பதில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் (Gautham Gambhir) கருத்துகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய டி20 உலகக் கோப்பையை சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி வென்றிருந்தாலும், அவரது தற்போதைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடிய விதம் ஆகியவை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.
தேர்வுக்குழுவின் அவசர ஆலோசனை
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரவிருக்கும் தொடரில் இந்தியா டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், கௌகாத்தியில் நாளை (மே 19, 2026) நடைபெறவுள்ள தேர்வுக்குழு கூட்டத்தில் சூர்யகுமாரின் எதிர்காலம் குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட உள்ளதாக பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியச் (BCCI) செயலாளர் தேவஜித் சய்கியா மற்றும் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான டி20 அணிகளைத் தேர்வு செய்யும்போது கேப்டன்சி மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கலாம் எனத் தெரிகிறது.
சூர்யகுமாருக்கு கௌதம் கம்பீரின் அசைக்க முடியாத ஆதரவு
சூர்யகுமாரின் பேட்டிங் ஃபார்ம் சரிவைச் சந்தித்தாலும், கௌதம் கம்பீர் தொடர்ந்து அவருக்கு ஆதரவளித்து வருகிறார். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2028 டி20 உலகக் கோப்பை வரை கம்பீர் தனது பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாகவும், அதுவரை சூர்யகுமாரே டி20 கேப்டனாகத் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யகுமாரின் “அமைதியான தலைமைப் பண்பு” (Calm Leadership) தனக்கு பயிற்சியாளராகப் பணியாற்ற பெரும் உதவியாக இருப்பதாக கம்பீர் ஏற்கனவே பாராட்டியுள்ளார்.
அஜித் அகர்கர் குழுவின் திட்டம் என்ன?
இருப்பினும், கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தரப்பில் இருந்து வரும் தகவல்களின்படி, சூர்யகுமார் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் கேப்டனாகச் செயல்படுவார். ஆனால், 2028 ஒலிம்பிக் சமயத்தில் அவருக்கு 38 வயதாகும் என்பதால், அவரது எதிர்காலம் முற்றிலும் பேட்டிங் ஃபார்ம் மற்றும் உடல் தகுதியைச் சார்ந்தே இருக்கும். கேப்டன்சிக்கு அப்பால் ஒரு பேட்ஸ்மேனாக அவர் ரன்களைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ரிஷப் பண்ட் குறித்த விவாதம்
கௌகாத்தி கூட்டத்தில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் (Rishab Pant) நீக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக அவர் செயல்பட்ட விதம் மற்றும் கூடுதல் பொறுப்புகள் அவரது இயல்பான அதிரடி பேட்டிங்கை பாதிப்பதாக கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய நிர்வாகிகள் கருதுகின்றனர்.
சூர்யகுமார் கேப்டனாகப் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், டி20 கிரிக்கெட்டின் தற்போதைய வேகத்திற்கு ஏற்ப அவர் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகிறது. பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முழு ஆதரவு சூர்யகுமாருக்கு இருந்தாலும், வரவிருக்கும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்கள் அவரது டி20 கேப்டன்சி எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இறுதிச் சோதனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
