Skip to content

ஐபிஎல் தொடர்; பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக பிளே -ஆஃப் சுற்றில் நுழைந்தது பெங்களூரு!

தர்மசாலா,மே.18; ஐபிஎல் தொடரில், இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று (மே 17, ஞாயிறு) நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் பிளே-ஆஃப் (Playoffs) சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெங்களூரு அணி பெற்றுள்ளது.

ஆர்சிபி-யின் இமாலய ரன் குவிப்பு: விராட் கோலி புதிய சாதனை!

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தெல் (11) ஏமாற்றம் அளித்தாலும், மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி அதிரடியாக விளையாடி அடித்தளம் அமைத்தார். 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் குவித்து கோலி அவுட்டானார். இந்த இன்னிங்ஸ் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 9ஆவது முறையாக ஒரு சீசனில் 500 ரன்களுக்கு மேல் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய தேவ்தத் படிக்கல் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

வெங்கடேஷ் – டிம் டேவிட் அதிரடி ஆட்டம்

மத்திய ஓவர்களில் களம் புகுந்த வெங்கடேஷ் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 12 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் என்ற குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தடுமாறிய பஞ்சாப் டாப்-ஆர்டர் பேட்டிங்

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆர்சிபி அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது சிறப்பான பந்துவீச்சால் தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா (0) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (2) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். கேப்டன் ஸ்ரேயாஸும் 1 ரன்னில் ராசிக் சலாம் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி பவர்பிளே ஓவர்களிலேயே பெரும் பின்னடைவை சந்தித்தது.

சசாங்க் சிங், ஸ்டோய்னிஸ் போராட்டம் வீண்

இதையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யான்ஷ் ஷெட்கே (35) மற்றும் கூப்பர் கோனொலி (37) ஜோடி அணியை மீட்டெடுக்க முயன்றனர். அவர்களைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சசாங்க் சிங் வெறும் 22 பந்துகளில் அரைசதம் கடந்து பஞ்சாப் ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார். அவர் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆர்சிபி தரப்பில் ராசிக் சலாம் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ச்சியாக 6ஆவது தோல்வியைச் சந்தித்த பஞ்சாப் அணி

இந்த 23 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 18 புள்ளிகளுடன் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, மீண்டும் தங்களது பலத்தை நிரூபித்துள்ளது. மறுபுறம், இந்த தொடர் தோல்வியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 6ஆவது தோல்வியைப் சந்தித்து ஏமாற்றமளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *