திருவனந்தபுரம், மே.18; கேரள மாநிலத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி. சதீசன் (V.D. Satheesan) இன்று (மே 18, திங்கள்) பதவி ஏற்றுக் கொண்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களின் முன்னிலையில் பிரமாண்டமான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்கும் விழா
காலை 10.15 மணியளவில் தொடங்கிய விழாவில், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், வி.டி. சதீசனுக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முதலமைச்சருடன் சேர்த்து புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 20 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த விழா தேசிய கீதத்துடன் நிறைவுற்றது.
காங்கிரஸ்-UDF கூட்டணியின் இமாலய வெற்றி
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி அமோக வெற்றி பெற்றது. சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை (LDF) வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கூட்டணி மீண்டும் கேரளாவில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.
விழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய அரசியல் தலைவர்களும் இதில் நேரில் பங்கேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீசனுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னரே திட்டமிடப்பட்ட பணியால் சசி தரூர் பங்கேற்கவில்லை
புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் கலந்துகொள்ளவில்லை.
முன்னரே திட்டமிடப்பட்ட ஒரு பணி காரணமாக விழாவில் கலந்துகொள்ள இயலாது என்று சசி தரூர் கடந்த 15ஆம் தேதியன்றே தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், “எனது சகாவும், கேரளாவின் புதிய முதலமைச்சருமான சதீசனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். இந்த வார இறுதியில், எனது முன்னாள் கல்வி நிறுவனமான @TuftsUniversity-யின் பிளெட்சர் சட்டம் மற்றும் தூதரகப் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் தொடக்கவுரை ஆற்றுவதற்காகவும், எனது பட்டதாரி வகுப்பின் 50வது ஆண்டு சந்திப்பில் பங்கேற்பதற்காகவும் நான் பாஸ்டனில் (அமெரிக்கா) இருக்கிறேன்!” என்று சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் எழுதியிருந்தார்.
புதிய அமைச்சரவை மற்றும் இலக்குகள்
புதிய முதலமைச்சர் வி.டி. சதீசன் தனது தலைமையிலான அமைச்சரவையில் அனுபவமிக்க மற்றும் இளம்பெண் தலைவர்களுக்கும் வாய்ப்பளித்துள்ளார். கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு 5 முக்கிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், இந்த ஆட்சி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும் அமையும் என்று உறுதி அளித்துள்ளனர்.
புதிய அரசு மீது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு
கேரளாவில் வி.டி. சதீசன் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு, அம்மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. கடந்த பத்தாண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, புதிய உத்வேகத்துடன் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
