டெல்லி,மே.19; இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரம் மற்றும் பிணை வழங்குதல் ஆகிய விவகாரங்களில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி கலவர வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை மறுத்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு குறித்து, தற்போதைய உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்று நேற்று (மே 18, திங்கள்கிழமை) தனது “கடுமையான அதிருப்தியை” (Serious Reservations) வெளிப்படுத்தியுள்ளது.
முந்தைய தீர்ப்பிலிருந்து முரண்பட்ட தற்போதைய அமர்வு
முந்தைய தீர்ப்பானது, உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வு (Larger Bench) வழங்கிய தீர்ப்பைப் பின்பற்றவில்லை என்று தற்போதைய அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் மிக உயர்ந்த சட்ட வழிகாட்டுதலின்படி, UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) மற்றும் PMLA (பணமோசடி தடுப்புச் சட்டம்) போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நீண்ட காலம் சிறைவாசம் மற்றும் விசாரணை தாமதமாகும் பட்சத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்பதே விதியாகும்.
‘பிணை என்பது பொதுவான விதி; சிறை என்பது விதிவிலக்கு”
விசாரணையின் போது நீதிமன்ற அமர்வு, “பிணை என்பது பொதுவான விதி, சிறை என்பது ஒரு விதிவிலக்கு” (Bail is the rule, jail the exception) என்பது வெறும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (CrPC) இருந்து உருவான முழக்கம் மட்டுமல்ல, அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 மற்றும் 22-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக் கோட்பாடு ஆகும் என்று குறிப்பிட்டது.
மேலும், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் எந்தவொரு நாகரிக சமூகத்திற்கும் “குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி” (Presumption Of Innocence) என்ற கொள்கையே அடிப்படையானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தேசிய பாதுகாப்பு அல்லது பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் இந்த கொள்கையை எவ்வாறு கையாள்வது என்பதை UAPA போன்ற சட்டங்கள் தீர்மானிக்கலாமே தவிர, சுதந்திரத்திற்கும் காவலுக்கும் இடையிலான அரசியலமைப்புச் சட்டத்தின் சமநிலையை முழுமையாக மாற்றிவிட முடியாது என்றும் அமர்வு விளக்கியது.
நஜீப் வழக்கு தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் ஒழுங்குமுறையும்
முன்னாள் பி.எஃப்.ஐ (PFI) உறுப்பினர் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்ட ‘கே.ஏ. நஜீப்’ (KA Najeeb) வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அது அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு கட்டாயச் சட்டம் (Binding Law) ஆகும் என்று கூறியது. இதனை விசாரணை நீதிமன்றங்களோ, உயர் நீதிமன்றங்களோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் குறைந்த எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வுகளோ நீர்த்துப்போகச் செய்யவோ, தவிர்க்கவோ முடியாது.
சிறிய அமர்வுகள் பெரிய அமர்வுகளின் தீர்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்!
நீதிமன்ற ஒழுங்குமுறை மற்றும் சட்டத்தின் உறுதித்தன்மை ஆகியவற்றை நிலைநாட்ட, சிறிய அமர்வுகள் எப்போதும் பெரிய அமர்வுகளின் தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டு அதைப் பின்பற்ற கடமைப்பட்டவை ஆகும்.
ஆனால், டெல்லி கலவரம் தொடர்பான ‘குர்விந்தர் சிங்’ மற்றும் ‘குல்பிஷா பாத்திமா’ வழக்குகளில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நஜீப் வழக்கில் வகுக்கப்பட்ட சட்டக் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுச் செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தற்போதைய அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பிரிவு 21-ன் முக்கியத்துவம்
நஜீப் வழக்கின் தீர்ப்பு, வெறும் காலம் கடந்துவிட்டது என்பதற்காக மட்டுமே UAPA பிரிவு 43-D(5)-ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தானாகவே பிணை கிடைத்துவிடும் என்று கூறவில்லை. மாறாக, விசாரணை முடிவடையாமல் நீண்ட காலம் ஒருவரை சிறையில் அடைப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21- வழங்கும் வாழும் உரிமைக்கு எதிரானது என்பதைப் பெரிய அமர்வு அங்கீகரித்துள்ளது.
குல்பிஷா பாத்திமா வழக்கின் தீர்ப்பானது, நஜீப் வழக்கின் வழிகாட்டுதல்களை மிகக் குறுகிய மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது போலக் காட்டியுள்ளது. நஜீப் தீர்ப்பின் உண்மையான நோக்கத்தை இவ்வாறு சிதைப்பது கவலையளிக்கிறது என்று நீதிபதிகள் கூறினர்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு கீழேயே UAPA சட்டம் இருக்க வேண்டும்
UAPA சட்டத்தின் கடுமையான பிரிவுகள், தாமதமான விசாரணைகளின் போது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ஐ விட மேலோங்கி நிற்பதைத் தடுப்பதே நஜீப் தீர்ப்பின் முக்கிய நோக்கமாகும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு கீழேயே UAPA சட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் மூலம், கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் பாயும் வழக்குகளிலும் தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் எந்தக் காலத்திலும் நசுக்கப்படக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றத்தின் இந்த அமர்வு மீண்டும் நிலைநாட்டியுள்ளது. விசாரணை அமைப்புகளின் தாமதத்தால் ஒருவரது வாழ்நாளின் முக்கியப் பகுதிகள் சிறையிலேயே கழிவதைத் தடுப்பதும், சட்டத்தின் படி அனைவருக்கும் சமமான நீதியை உறுதி செய்வதும் நீதிமன்றங்களின் முதன்மைக் கடமை என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.
