சென்னை, மே.20; தமிழ்நாடு அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் பல்வேறு சுவாரசியமான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தவெக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் இணைந்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு-இடதுசாரிகள் போராட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இன்று (மே 20, 2026) இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின், பெ.சண்முகம் மற்றும் மு.வீரபாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பெ.சண்முகம், “தேர்தல் முடிந்தவுடன் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும் என நாங்கள் முன்பே எச்சரித்தோம்; ஆனால் அப்போது அது வதந்தி என மறுத்த பாஜக அமைச்சர்கள், தற்போது தேர்தலுக்குப் பின் இருமுறை விலையை உயர்த்தியுள்ளனர்; விரைவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
தவெக அரசுக்கான ஆதரவும் விசிகவின் நிலைப்பாடும்
தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் சூழல் மற்றும் தவெக அரசுக்கு அளிக்கும் ஆதரவு குறித்துப் பேசிய பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்த மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்தார்.
“இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கவே முதலில் முடிவெடுத்தோம்; ஒருவேளை அமைச்சரவையில் பங்கேற்பது என்ற யோசனை விசிகவுக்கு இருந்தால், அது குறித்து அவர்களே இறுதி முடிவு எடுப்பார்கள்; நிச்சயம் அவர்கள் எங்களுடன் இதுகுறித்து ஆலோசிப்பார்கள்;
ஆனால், இடதுசாரிகள் எடுக்கும் அதே நிலைப்பாட்டையே விசிகவும் எடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை; அமைச்சரவையில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விசிக முடிவெடுத்தால், அதில் எந்தத் தவறும் கிடையாது” என்று சண்முகம் தெளிவுபடுத்தினார்.
அமைச்சரவையில் அதிமுக இணைந்தால் ஆதரவு மறுபரிசீலனை!
அதே நேரத்தில், தவெக அரசுடன் அதிமுக கைகோர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பெ.சண்முகம், “ஒருவேளை அதிமுகவினர் தவெக அமைச்சரவையில் பங்கேற்றால், தவெக அரசுக்கு நாங்கள் வழங்கி வரும் ஆதரவு குறித்து சிபிஎம் மறுபரிசீலனை செய்யும்” என எச்சரிக்கும் தொனியில் குறிப்பிட்டார்.
மு.வீரபாண்டியன் வெளியிட்ட சிபிஐ-யின் நிலைப்பாடு
செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் இடதுசாரிகளும் விசிகவும் தற்போதைக்கு ஒரே நேர்க்கோட்டில்தான் பயணிக்கிறோம்; மக்கள் அளித்த தீர்ப்பை மதித்தும், மீண்டும் ஒரு தேர்தல் வந்துவிடக் கூடாது, ஆளுநரின் கைகளுக்கு அதிகாரம் சென்றுவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்திலுமே நாங்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம்.
எங்கள் வெளிப்படையான ஆதரவே அவர்களுக்குப் போதுமானது, வேறு சிந்தனைகள் தேவையில்லை; நாங்கள் வெளியில் இருந்தே ஆட்சியைத் தொடர்ந்து ஆதரிப்போம். உழைக்கும் மக்கள் மற்றும் ஏழை, எளியோரின் உரிமைகளுக்காக எப்போதும் எங்கள் குரல் ஒலிக்கும்; அரசுக்கு தேவையற்ற எந்தவொரு குடைச்சலையும் நாங்கள் கொடுக்க மாட்டோம்” என்று உறுதியளித்தார்.
அதிமுக அமைச்சரவைக்குள் வந்தால்… இடதுசாரிகளின் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் இடதுசாரிகளின் இந்த அறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. விசிக அமைச்சரவையில் இணைந்தால் அது தவறில்லை என சிபிஎம் தாராள மனதோடு கூறியிருந்தாலும், அதிமுக அமைச்சரவைக்குள் வந்தால் ஆதரவை விலக்க நேரிடும் என்ற எச்சரிக்கை, தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
