Skip to content

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்; அதனால் என்ன…? புதுக்கணக்கு தொடங்கிய நிறுவனர்!

டெல்லி,மே.22; சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பெரும் புயலைக் கிளப்பிய ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற நையாண்டி (Satirical) டிஜிட்டல் அமைப்பின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், கணக்கு முடக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) ‘காக்ரோச் இஸ் பேக்’ (@Cockroachisback) என்ற பெயரில் புதிய கணக்கைத் தொடங்கியுள்ளார். புதிய கணக்கு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான நெட்டிசன்கள் அதில் இணையத் தொடங்கியுள்ளனர்.

பின்னணி என்ன? கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எப்படி உருவானது?

கடந்த (மே) 15ஆம் தேதியன்று, இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கின் விசாரணையின் போது, தகுதியற்ற முறையில் சட்டத்துறையில் நுழைபவர்களைக் குறிப்பிடும் வகையில் “ஒட்டுண்ணிகள்” (Parasites) மற்றும் “கரப்பான் பூச்சிகள்” (Cockroaches)என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. (பின்னர் தலைமை நீதிபதி, ஊடகங்கள் தனது கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு தவறான அர்த்தத்தில் வெளியிட்டுவிட்டதாக விளக்கம் அளித்திருந்தார்).

இதனைத் தொடர்ந்து, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் இளைஞர்களின் குரலை நையாண்டி முறையில் வெளிப்படுத்தும் நோக்கில், கடந்த 16ஆம் தேதியன்று ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அரசியல் மூலோபாயவாதியான அபிஜீத் திப்கே என்பவரால் இந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) தொடங்கப்பட்டது.

இணையத்தில் சாதனை படைத்த நையாண்டி இயக்கம்

இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, தேர்வுத்தாள் கசிவு மற்றும் கல்வி முறை போன்ற சமகாலப் பிரச்னைகளை மீம்கள் (Memes), அனிமேஷன்கள் மற்றும் நையாண்டி அறிக்கைகள் மூலம் இந்த அமைப்பு விமர்சித்து வந்தது. மிகக் குறுகிய காலத்தில் இந்த இயக்கம் பெரும் வைரலானது.
இந்தியாவில் இதன் எக்ஸ் கணக்கு முடக்கப்படுவதற்கு முன்பு வரை, சுமார் 2,01,000 பின்தொடர்பவர்களைக் (Followers) கொண்டிருந்தது. மேலும், இதன் இன்ஸ்டாகிராம் பக்கம் 1.4 கோடிக்கும் (14 Million)அதிகமான பின்தொடர்பாளர்களுடன் தீவிரமாக இயங்கியது. இது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கையை விட (சுமார் 88 லட்சம்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

காக்ரோச் ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கத்தை முடக்கியது மத்திய அரசு

அரசியல்வாதிகளின் கருத்து கணக்கு முடக்கம் குறித்துப் பேசிய நிறுவனர் அபிஜீத் திப்கே, “நேற்றே எங்களது கணக்கை ஹேக் செய்ய முயற்சிகள் நடந்ததால், இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இது அரசு தனக்குத் தானே அடித்துக் கொண்ட சுயகோல் (SelfGoal). இந்த நடவடிக்கையை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த இயக்கத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டு பயந்தே அரசு இந்த முடக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம், இந்த டிஜிட்டல் முடக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் போன்றோர் இந்த நையாண்டி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரு நகைக்சுவையைக் கூட தாங்க முடியாதவர்கள் என விமர்சனம்

“ஒரு நகைச்சுவையைக்கூடத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தங்களையே நகைச்சுவையாக்கிக் கொள்கிறார்கள்” என்று சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் விமர்சித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை மீம்கள் மற்றும் நையாண்டிகள் வழியாக வெளிப்படுத்துவது உலகளவில் அதிகரித்து வரும் ஒரு போக்காகும். இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் உருவான ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ மீதான இந்த டிஜிட்டல் தடை, சமகாலத்தில் இணையச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் டிஜிட்டல் போராட்ட முறைகள் குறித்த புதிய விவாதங்களை அரசியல் மற்றும் சமூக தளங்களில் உருவாக்கியுள்ளது. தடையை மீறியும் ‘கரப்பான் பூச்சிகள் சாவதில்லை’ (Cockroaches Don’t Die) என்ற வாசகத்தோடு இந்த இயக்கம் புதிய கணக்கில் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *