டெல்லி,மே.22; இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பெரும் அலையை ஏற்படுத்திய ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party – CJP) என்ற நையாண்டி பக்கத்தின் எக்ஸ் தள கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சட்டப்பூர்வ புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஜனநாயகத்தில் இத்தகைய நையாண்டிகளை முடக்குவது “முட்டாள்தனமானது” என்று அவர் விமர்சித்துள்ளார்.
காக்ரோச் ஜனதா கட்சி (CJP) என்றால் என்ன?
கடந்த சில தினங்களுக்கு முன்னர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கு விசாரணையின் போது, தகுதியற்ற முறையில் சட்டத்துறையில் நுழைபவர்களைக் குறிப்பிடும் வகையில் “ஒட்டுண்ணிகள்” (Parasites) மற்றும் “கரப்பான் பூச்சிகள்” (Cockroaches)என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. ஊடகங்கள் தனது கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு தவறான அர்த்தத்தில் வெளியிட்டுவிட்டதாக . தலைமை நீதிபதி விளக்கம் அளித்திருந்தார்).
தலைமை நீதிபதியின் கருத்துகளை கிண்டல் செய்யும் வகையில் நையாண்டி இயக்கம் தொடங்கப்பட்டது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அபிஜித் திப்கே (Abhijit Dipke) என்ற இந்திய இளைஞரால் தொடங்கப்பட்ட இந்த தளம், மிகக் குறுகிய காலத்தில் இன்ஸ்டாகிராமில் 1.9 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று அசுர வளர்ச்சி அடைந்தது. இளைஞர்களின் மனக்குமுறல்களையும், தற்போதைய அரசியல் சூழலையும் நையாண்டி (Satire) வடிவில் வெளிப்படுத்துவதே இந்த பக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
சசி தரூர் முன்வைக்கும் வாதம் என்ன?
அரசின் உத்தரவின் பேரில் இந்த கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டதை அடுத்து, சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது:
“மக்களின் உணர்வுகள், ஏமாற்றங்கள் மற்றும் குறைகளை வெளிப்படுத்துவதற்கான வடிகால்களை வழங்குவதே ஜனநாயகத்தின் மிகப்பெரிய நற்பண்பு. ஒரு நையாண்டித் தளத்தில் இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்த அனுமதிப்பது தேசிய நலனுக்கு உகந்தது”
மேலும், இந்த பக்கம் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட சதித்திட்டம் என்று பரப்பப்படும் வதந்திகளை அவர் மறுத்துள்ளார். இதன் நிறுவனர் அபிஜித் திப்கே வழங்கிய ஆதாரங்களின்படி, இந்த பக்கத்தைப் பின்தொடர்பவர்களில் 94 சதவீதம் பேர் இந்தியாவிலேயே உள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரஷர் குக்கர் மற்றும் ஜனநாயகம்: சசி தரூர் உவமை
இந்த நையாண்டி இயக்கங்களை பிரஷர் குக்கரின் பாதுகாப்பு வால்வுகளுடன் (Safety valves) சசி தரூர் ஒப்பிட்டுள்ளார். “பிரஷர் குக்கரில் உள்ள வால்வுகள் நீராவியை வெளியேற்றி அழுத்தத்தைக் குறைப்பது போல, இத்தகைய பக்கங்கள் இளைஞர்களின் கோபத்தை வன்முறையாக மாறாமல் தடுத்து நையாண்டியாக வெளிப்படுத்த உதவுகின்றன. வால்வுகளை மூடினால் குக்கர் வெடித்துவிடும். குழப்பம், அராஜகம் அல்லது புரட்சியை விட நான் நையாண்டியையே விரும்புகிறேன்,” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
அரசும் எதிர்க்கட்சிகளும் தங்களுக்குள் சுயபரிசோதனை செய்துகொண்டு, இன்றைய இளம் இந்தியாவின் உண்மையான பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும், அதை விடுத்து இத்தகைய குரல்களை ஒடுக்குவது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அபிஜித் திப்கே மற்றும் அவரது பெற்றோர் கவலை
இந்த தளத்தை உருவாக்கிய அபிஜித் திப்கே மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார். தனது எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதை அடுத்து, ‘காக்ரோச் இஸ் பேக்’ (Cockroach is Back) என்ற புதிய கணக்கைத் தொடங்கி தனது இயக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். இதற்கிடையில், மகாராஷ்டிராவில் உள்ள அவரது பெற்றோர், தனது மகன் அரசியலில் ஈடுபடுவதை தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு தங்களின் தூக்கம் தொலைந்துவிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்களிடம் கவலை தெரிவித்துள்ளனர்.
நையாண்டியை ஒடுக்குவது மேலும் அதிருப்தியை அதிகரிக்கும்
ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் கருத்துச் சுதந்திரமும், ஆரோக்கியமான நையாண்டிகளும் ஒடுக்கப்படும் போது, அது இளைஞர்களிடையே மேலும் அதிருப்தியை அதிகரிக்கும் என்பதே சசி தரூரின் கருத்தாக உள்ளது. அரசு இந்தத் தடையை நீக்கி, இளைஞர்களின் குரல்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
