Skip to content

“அராஜகத்தை உருவாக்க முயற்சி”: ‘ஓராண்டில் மோடி அரசு கவிழும்’ என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

டெல்லி,மே.25; இந்திய அரசியலில் மீண்டும் ஒருமுறை வார்த்தைப்போர் வெடித்துள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கவிழ்ந்துவிடும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கு, பாஜக தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி நாட்டில் “அராஜகத்தை உருவாக்க” முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு: பின்னணி என்ன?

டெல்லியில் நேற்று (மே 24, 2026) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசு அடுத்த ஓராண்டுக்குள் கவிழ்ந்துவிடும்” என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார அதிருப்தியே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களாக நீட் (NEET UG) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். பிரதமர் மோடியின் இத்தாலி சுற்றுப்பயணத்தை விமர்சித்த அவர், “இந்தியாவில் இளைஞர்கள் நீட் வினாத்தாள் கசிவால் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் இத்தாலியில் ரீல்ஸ் (Reels) செய்து கொண்டிருக்கிறார்” என்று சாடினார்.

இது ஒரு பெரிய சதி என பியூஷ் கோயல் பதிலடி

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “ராகுல் காந்தியின் இந்த அறிக்கை, இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் காங்கிரஸ், பிற எதிர்க்கட்சிகள் மற்றும் ‘கருத்துருவாக்க’ (ToolKit) கும்பலின் ஒரு பெரிய சதியைக் காட்டுகிறது. இது ஒரு சாதாரண அறிக்கை அல்ல, மாறாக நாட்டில் அராஜகத்தைப் பரப்புவதற்கான தீவிரமான திட்டமாகும்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், நாட்டை அவதூறாகப் பேசுவதும், அரசியலமைப்பு நிறுவனங்களை அவமதிப்பதும் தான் காங்கிரஸின் உண்மையான நோக்கம் என்றும் அவர் சாடினார்.

கலவரத்தை தூண்ட முயற்சி என சம்பித் பத்ரா சாடல்

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இதுகுறித்து வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஒருமுறை தனது அராஜகப் போக்கை வெளிப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும் கலவரங்களைத் தூண்டி, மோடி அரசைக் கவிழ்க்க அவர் முயற்சிக்கிறார்” என்று கூறினார்.

மேலும், இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்க வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலை (Foreign Agenda) ராகுல் காந்தி செயல்படுத்துகிறார் என்றும், ஜார்ஜ் சோரஸ் போன்ற வெளிநாட்டு முதலாளிகளால் இந்தியாவின் 140 கோடி மக்களின் அரசை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பத்ரா மேலும் தெரிவித்தார். இதனுடன், பாஜக தலைவர் பிரதீப் பண்டாரியும் ராகுல் காந்தியின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பல்வேறு பிரச்னைகனை முன்வைத்து பாஜகவுக்கு காங்கிரஸ் குடைச்சல்

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே அரசியல் மோதல்கள் குறைந்தபாடில்லை. நீட் தேர்வு முறைகேடு, பொருளாதாரப் பிரச்னைகள் போன்றவற்றை முன்வைத்து அரசை வீழ்த்த முடியும் என காங்கிரஸ் நம்பும் வேளையில், நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாக பாஜக குற்றஞ்சாட்டுகிறது. இந்த அரசியல் மோதல்கள் வரும் நாட்களில் இந்திய நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் தீவிரமாகப் பேசப்படும் என்றே தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *