சென்னை,மே.25; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க) என 4 முனைப் போட்டி நிலவியது.
இதில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
மூன்று அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா
முதலமைச்சர் விஜய் தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு அரசியலில் மேலும் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க-வைச் சேர்ந்த மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். வேலுமணி தரப்பு ஆதரவாளர்களாகக் கருதப்படும் இவர்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்தனர். சட்டப்பேரவை விதிகளின்படி கடிதங்கள் முறையாக இருந்ததாகக்கூறி, அவர்களின் பதவி விலகல் கடிதங்களை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
3 பேரும் பதவி விலகிய உடனேயே தவெகவில் ஐக்கியம்
பதவியை ராஜினாமா செய்த சில நிமிடங்களிலேயே, அவர்கள் மூவரும் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். அவர்களுக்கு உடனடியாக கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. அந்த மூவரும் போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் மறுதேர்தல் வரும்போது தவெக சார்பில் அவர்களே மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் விலகல்: இபிஎஸ் கடும் கண்டனம்
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் இந்த திடீர் கட்சித் தாவல் அக்கட்சி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாகக் கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தவர்கள் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களது வாழ்வு இருக்கிறது என செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
“100 சதவீத குதிரை பேரம்” – இன்பதுரை எம்.பி. கடும் தாக்கு
இதேபோன்று அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை வன்மையாகக் கண்டித்து அக்கட்சி எம்பி இன்பதுரை எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், “அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே, அவர்கள் மூவரும் அவசர அவசரமாக த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுணாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு, மின்னல் வேகத்தில் அவர்களுக்கு த.வெ.க உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை. இது 100 சதவீத குதிரை பேரம்!” என்று மிகக் காட்டமாக சாடியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகல்; காங்கிரசை சாடிய ஸ்டாலின்
இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லி கடிதம் கொடுத்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையிலிருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளித்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
