Skip to content

மதிமுக, திமுக, பாஜக, அதிமுக, தற்போது தவெக; வேறு யாரு, நம்ம மதுர டாக்டரு சரவணன் தான்! உள்ளாட்சித் தேர்தல் வருதுல..!

மதுரை,மே.26: தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பங்களுக்குப் பெயர் போன திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் பா. சரவணன், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டே அவர் இந்தத் திடீர் முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் பயணத்தில் அடுத்த அதிரடி மாற்றம்

மருத்துவர் சரவணன் தனது அரசியல் வாழ்க்கையில் நிலையான ஒரு கட்சியில் நீடிக்காமல், தொடர்ச்சியாகப் பல்வேறு முக்கிய கட்சிகளுக்கு மாறி வருபவர் என்ற விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். மதிமுக-வில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் திமுக, பாஜக, அதிமுக எனத் தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்திலும் பயணித்தவர். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது அவர் தனது அடுத்த அரசியல் இன்னிங்ஸைத் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடங்கியுள்ளார்.

தவெக-வை நோக்கி நகரும் முக்கியப் புள்ளிகள்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், மதுரையின் முக்கிய முகங்களில் ஒருவரான மருத்துவர் சரவணன் தவெக-வில் இணைந்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலை குறிவைக்கும் மருத்துவர் சரவணன்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருவதால், அதனை எதிர்கொள்ள தவெக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்தத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிட அல்லது வலுவான கூட்டணி அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தவெக-வின் செல்வாக்கை அதிகரிக்கவும், உள்ளாட்சித் தேர்தலில் முக்கியப் பதவிகளைக் கைப்பற்றவும் மருத்துவர் சரவணன் திட்டமிட்டுள்ளார். அவர் வகுக்கப் போகும் அக்கட்சிக்கு எந்தளவுக்கு வெற்றியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடரும் கட்சித் தாவல் விமர்சனங்கள்

சரவணன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் மீதான ‘கட்சித் தாவல்’ விமர்சனங்கள் மீண்டும் எழுந்துள்ளன. “ஒரு கொள்கையில் உறுதியாக இல்லாதவர் எவ்வாறு தவெக-வின் கொள்கைகளைப் பரப்புவார்?” என்று மாற்றுக்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். தவெகவிற்கு கொள்கை இருந்தால் தானே, அதனைப் பரப்ப ஆட்கள் தேவை என்று மற்றொரு தரப்பினர் கிண்டலடிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, தொகுதி மக்களுடனான நேரடித் தொடர்பு மற்றும் மருத்துவச் சேவைகளின் மூலம் ஓரளவு செல்வாக்கு பெற்றவராகத் திகழும் சரவணன், தவெக-விற்கு தென் மாவட்டங்களில் நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருப்பார் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

மருத்துவர் சரவணன் தவெக-வில் இணைந்திருப்பது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தென் மாவட்டங்களில் அந்தக் கட்சிக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று கட்சியினர் நம்புகின்றனர். தேர்தலை எதிர்கொள்வதில் தவெக-விற்கு இத்தகைய அனுபவமிக்க அரசியல்வாதிகளின் வருகை தேவைப்படுகிறது. பல கட்சிகள் மாறி தற்போது தவெகவில் ஐக்கியமாகியிருக்கும் சரவணனின் வருகை விஜய்யின் கட்சிக்கு பலனைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *