சென்னை,மே.27; தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் இன்று முதன்முறையாக டெல்லி செல்கிறார். பயணத்தின்போது பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை விஜய் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக, கடந்த மே 10-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் மிக முக்கியமான முதல் அதிகாரப்பூர்வப் பயணமாக இன்று (மே 27, 2026) டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். இவருடைய வருகைக்கான பாதுகாப்பு மற்றும் இதர அரசு ஏற்பாடுகளைத் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தீவிரமாகக் கவனித்து வருகின்றனர்.
டெல்லியில் அரசு மரியாதை மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு
டெல்லி சென்றடையும் முதலமைச்சர் விஜய், அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு (Tamil Nadu House) முதன்முறையாகச் செல்கிறார். அங்கு அவருக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ மரியாதை அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைக்கும் முக்கிய நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு: தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகள்
இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை விஜய் முதன்முறையாக சந்திக்கவிருப்பதால் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்த விரிவான மனு ஒன்றை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் சமர்ப்பிக்க உள்ளார்.
இந்தச் சந்திப்பிற்காகத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டு முன்னேற்பாடுகளைச் செய்து வருவதாகத் தெரிகிறது. பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்திக்க உள்ளார்.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரித் தலைவர்களையும் சந்திக்க திட்டம்?
முதலமைச்சர் விஜய்யின் இந்தப் பயணம் அரசு முறைப் பயணமாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. டெல்லி பயணத்தின் இரண்டாம் நாளான நாளை (வியாழக்கிழமை), அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய இடதுசாரி கட்சிகளின் தேசியத் தலைவர்களையும் விஜய் சந்திக்கவுள்ளார். இந்த முக்கிய அரசியல் மற்றும் அரசு முறைச் சந்திப்புகளை நிறைவு செய்த பின்னர், நாளை மாலையே அவர் சென்னை திரும்புகிறார்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் இந்த முதல் டெல்லி பயணம், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான மத்திய அரசின் ஆதரவைப் பெறுவதற்கும், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
