Skip to content

தவெகவின் குதிரை பேர அரசியல்; காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி – மாணிக்கம் தாகூர் இடையே சொற்போர்!

சென்னை,மே.27; தமிழ்நாடு அரசியல் களம் தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் அதன் அரசியல் நகர்வுகளைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. தவெக-வின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் குதிரை பேர அரசியல் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு இடையே சமூக வலைத்தளத்தில் கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிமணி எம்.பி-யின் ஆவேசமான எக்ஸ் தளப்பதிவு

கரூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் தவெக மற்றும் குதிரை பேர அரசியல் குறித்து மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

அவர் தனது பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு நிச்சயம் நாம் அவர்களுக்குத் துணை நிற்போம். ஆனால், அதற்காக தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

குதிரை பேர அரசியலை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது: ஜோதிமணி

மேலும், குதிரை பேர அரசியலை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது என்று தெரிவித்த அவர், “குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தையும், காங்கிரஸ் கட்சியையும் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம் தான். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை ஆதரிப்பது, தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்ப்பது என்ற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்க முடியாது. ராகுல் காந்தி கொள்கைக்காக சமரசமற்று போராடி வரும் சூழலில், அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது” என ஆவேசமாகப் பதிவிட்டிருந்தார்.

மாணிக்கம் தாகூர் எம்.பி கொடுத்த அதிரடி பதிலடி

ஜோதிமணியின் இந்த பதிவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மற்றொரு காங்கிரஸ் எம்.பி-யான மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் தனது பதிவில், “கடந்த 23-ம் தேதி ‘காங்கிரஸ் ஒழிக… ராகுல் காந்தி ஒழிக’ என ஸ்டாலின் முன்னிலையில் கோஷம் எழுப்பப்பட்டது. காங்கிரஸை ஒட்டுண்ணி, துரோகி என்று உதயநிதி அணி தீர்மானம் நிறைவேற்றியது. 25ஆம் தேதி காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என்று ஸ்டாலின் தாக்கினார். அப்போதெல்லாம் அமைதி காத்தனர். ஒரு எக்ஸ் போஸ்ட் கூட இல்லை; ஒரு சத்தமும் இல்லை; ஒரு கண்டனம் கூட இல்லை. ஆனால், இன்று திடீரென சில தோழமை சுட்டுதல் நிபுணர்கள் வந்து அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்” என்று ஜோதிமணியை மறைமுகமாகச் சாடினார்.

அடங்காத வார்த்தைப் போர்: ஜோதிமணி மீண்டும் பதில்

மாணிக்கம் தாகூரின் இந்த விமர்சனத்திற்கு ஜோதிமணி மீண்டும் உடனடியாகப் பதிலடி கொடுத்தார்.

அவர், “தவெக என்ற ஒரு கட்சி உருவாவதற்கு முன்பு இந்த திடீர் திமுக எதிர்ப்பாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று வரலாறு சொல்லும். காமராஜருக்காகக் கூட வாய் திறக்காமல் அவ்வளவு ப(வ்)யம்! இன்னும் நிறைய சொல்லலாம், கண்ணியம் கருதி தவிர்க்கிறேன். நாம் எதிர்க்க வேண்டியது பாஜகவை, சக கட்சிக்காரர்களை அல்ல. அதிகாரத்திற்கு நெருக்கமாக காட்டிக் கொள்வதற்காக காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது, செய்யவும் மாட்டேன். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றுட்டும் தொடர்ந்து செல்வோம்” என்று பதிவிட்டு விவாதத்தை மேலும் சூடாக்கினார்.

தவெக வருகையால் பாரம்பரிய கட்சிகளுக்குள் சலசலப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையும், அதன் அரசியல் நகர்வுகளும் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியமிக்க கூட்டணிக் கட்சிகளுக்குள் எந்த அளவுக்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த இரு காங்கிரஸ் எம்.பி-க்களின் வார்த்தைப் போர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கூட்டணி தர்மம் ஒருபுறம் இருந்தாலும், கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்யக் கூடாது என்ற ஜோதிமணியின் வாதமும், பிற கட்சிகள் விமர்சனம் செய்யும் போது ஏன் மௌனம் காக்க வேண்டும் என்ற மாணிக்கம் தாகூரின் கேள்வியும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலையும், தவெக விவகாரத்தில் உள்ள மாறுபட்ட கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *