Skip to content

ஐபிஎல் தொடர்; ‘ஸ்மார்ட் சன்கிளாஸ்’ பயன்படுத்த கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் தடை!

மும்பை,மே.29; ஐபிஎல் (IPL 2026) கிரிக்கெட் தொடரில் வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் ‘ஸ்மார்ட் சன்கிளாஸ்’ (Smart Sunglasses) அல்லது கூலிங் கிளாஸ்களைப் பயன்படுத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிரடி தடை விதித்துள்ளது.

பின்னணி என்ன?

மே 18 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அனுப்பிய புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் நகல் கிரிக்பஸ் (CricBuzz) இணையதளத்திற்கு கிடைத்துள்ளது. அதன்படி, சந்தையில் கிடைக்கும் சில அதிநவீன ஸ்மார்ட் சன்கிளாஸ்கள் மூலம் நேரலை ஒளிபரப்பு (Live Streaming), குறுஞ்செய்தி அனுப்புதல்/பெறுதல், மற்றும் ஆடியோ/வீடியோ அழைப்புகள் (Audio/Video Calling) போன்றவற்றை மொபைல் டேட்டா அல்லது வைஃபை உதவியுடன் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMOA விதிமுறைகள் மீறல்

வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் தங்கும் பகுதி (Players and Match Officials Area – PMOA) விதிமுறைகளின்படி, இத்தகைய ஸ்மார்ட் கண்ணாடிகள் தகவல் தொடர்பு மற்றும் ஆடியோ/வீடியோ பதிவு செய்யும் சாதனங்களாகக் (Communication Device) கருதப்படுகின்றன. எனவே, PMOA பகுதிக்குள் இவற்றை எடுத்துச் செல்லவோ அல்லது பயன்படுத்தவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான எச்சரிக்கை

போட்டி நடைபெறும் நாட்களில், அனைத்து வீரர்களும் மற்றும் அவர்களது உதவி ஊழியர்களும் மைதானத்திற்குள் நுழையும் போதே தங்களது மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களுடன் சேர்த்து, இந்த ஸ்மார்ட் சன்கிளாஸ்களையும் பாதுகாப்பு தொடர்பு அதிகாரியிடம் (Security Liaison Officer) ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவது கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய செயலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான அபராதம் அல்லது தண்டனைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ ஊழல் தடுப்புப்பிரிவு தீவிர கண்காணிப்பு

ஐபிஎல் தொடரில் எவ்விதமான ஊழல் அல்லது முறைகேடுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவால்களை முன்கூட்டியே கணித்து கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, ஆட்டத்தின் நேர்மையைக் காக்க நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *