Skip to content

கர்நாடக முதல்வராகிறார் டி.கே.சிவகுமார்: தவிடுபொடியாகிறதா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எதிர்காலம்?

பெங்களூரு,மே.29; கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தலைமை மாற்றம் இறுதியாக அரங்கேறியுள்ளது. சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்க உள்ளார். இந்த அதிகார மாற்றம் காங்கிரஸுக்குள் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியிருந்தாலும், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (JD-S) கட்சிக்கு இது ஒரு மிகப்பெரிய ‘வாழ்வா சாவா’ போராட்டமாக மாறியுள்ளது.

ஒக்கலிகா சமூகத்தின் புதிய முகமாக உருவெடுக்கும் சிவகுமார்

கர்நாடகாவின் பழைய மைசூர் பிராந்தியத்தில் ‘ஒக்கலிகா’ (Vokkaliga) சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். பாரம்பரியமாக இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் தேவகவுடா மற்றும் அவரது மகன் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோரின் பின்னால் தான் இருந்து வந்தது. மதச்சார்பற்ற ஜனநா தளம் கட்சியின் முதுகெலும்பாக விளங்கியதும் இந்த ஒக்கலிகா வாக்கு வங்கிதான்.

ஆனால், தற்போது ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த பலம் வாய்ந்த தலைவரான டி.கே.சிவகுமார் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அடித்தளத்தையே உலுக்கியுள்ளது. தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே மாநிலத்தின் மிக உயரிய பதவியில் இருக்கும்போது, மக்கள் காங்கிரஸை நோக்கி நகரத் தொடங்குவார்கள் என்பது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஏற்பட்டுள்ள முதல் ஆபத்து.

குமாரசாமியின் மாநில அரசியல் மறுபிரவேசம் அவசியமாகிறதா?

மத்திய அமைச்சராக இருக்கும் ஹெச்.டி.குமாரசாமி, இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். வரவிருக்கும் 2028 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சரிவைத் தடுக்காவிட்டால், பழைய மைசூர் பகுதியில் அக்கட்சி தனது செல்வாக்கை முழுமையாக இழந்துவிடும் அபாயம் உள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அடிமட்டத் தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்வது குமாரசாமிக்கு இப்போது பெரிய சவாலாக மாறியுள்ளது. சிவகுமாரின் அசாத்திய அரசியல் வியூகங்களைச் சமாளிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் புதிய திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டி.கே.சிவகுமாரின் அசுர வளர்ச்சி; மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு சிக்கல்

டி.கே.சிவகுமாரின் இந்த அசுர வளர்ச்சி, கர்நாடக அரசியலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. பழைய மைசூர் பிராந்தியத்தில் காங்கிரஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சிவகுமார் தீவிரமாக முயல்வார் என்பதில் சந்தேகமில்லை. இந்த அரசியல் சுனாமியைத் தாங்கி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனது ஓட்டு வங்கியை எப்படிக் காப்பாற்றப் போகிறது என்பதைப் பொறுத்தே அக்கட்சியின் எதிர்காலம் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *