டெல்லி,ஜூன்.01; மத்திய அரசின் சிபிஎஸ்இ (CBSE) ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) எனப்படும் கணினி வழி விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி மாணவர்கள் போராடி வருகின்றனர். தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பிய மாணவர்களை பாஜக மற்றும் வலதுசாரிகள் “தேசவிரோதிகள்” என்றும் “சதி கோட்பாடுகளில் ஈடுபடுபவர்கள்” (Deep state agents) என்றும் முத்திரை குத்தி விமர்சித்தனர்.
பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களைச் நேரில் சந்தித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், இந்த விவாதத்தைக் கிண்டல் செய்யும் விதமாகப் பதிவிட்டுள்ளார்.
மாணவர்களுடன் ராகுல் காந்தியின் கலகலப்பான சந்திப்பு
எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள 90 வினாடி வீடியோ பதிவில், “எனது சக ‘தேசவிரோத ஏஜென்ட்களுடன்’ (Soros agents) ஒரு வெளிப்படையான உரையாடல்” என்று தலைப்பிட்டுள்ளார். மேலும், “வேதாந்த் மற்றும் அவரது நண்பர்கள் மிகவும் புத்திசாலித்தனமான, தைரியமான இளம் இந்தியர்கள். அவர்கள் சிபிஎஸ்இ மற்றும் மோடி அரசிடம் எளிய கேள்விகளை மட்டுமே கேட்டார்கள். ஆனால் அவர்களுக்குப் பதில்களுக்குப் பதிலாக அவமானங்களே கிடைத்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.
விடைத்தாள்களை கேட்டால் தேசவிரோதிகள் என முத்திரை குத்துவதா?
இந்த சந்திப்பின் போது மாணவர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நீங்கள் மாணவர்கள், உங்கள் விடைத்தாள்களைத் தான் கேட்கிறீர்கள். ஆனால் திடீரென நீங்கள் தேசவிரோதிகள் ஆக்கப்பட்டுவிட்டீர்கள். ஒரு சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றால் முதலில் அந்த சிக்கல் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு அரசோ சிக்கலை ஒப்புக்கொள்ள மறுத்து, அப்பாவி குழந்தைகளைக் குற்றம் சாட்டுகிறது. நீங்கள் தீவிரவாதிகள், உளவு பார்ப்பவர்கள் என்று பழிபோடுகிறது” என்று வேதனை தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த கேமராமேனைப் பார்த்து, “தம்பி, இந்த ‘தீவிரவாதிகளின்’ முகங்களை நன்றாகக் காட்டுங்கள்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
சிபிஎஸ்இ முறைகேடு புகாரும் பின்னணியும்
12-ஆம் வகுப்பு மாணவரான வேதாந்த் என்பவர், சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டின் கீழ் தனக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட இயற்பியல் (Physics) விடைத்தாள் தன்னுடையதே அல்ல என்று எக்ஸ் தளத்தில் ஆதாரத்துடன் பதிவிட்டார். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பல மாணவர்களும் தங்களுக்கு இதே போன்ற தவறு நடந்துள்ளதாகப் புகார் கூறினர். பின்னர் சிபிஎஸ்இ நிர்வாகம் மாணவர்களைத் தொடர்புகொண்டு சரியான விடைத்தாள்களை வழங்கியது.
இந்த ஆன்-ஸ்கிரீன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்காக சிபிஎஸ்இ ‘கோயம்ப்ட்’ (Coempt Edu Teck) என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் குறித்து ராகுல் காந்தி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முன்பு பிரச்னையில் சிக்கிய நிறுவனத்திற்கே மீண்டும் ஒப்பந்தம்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு: “கடந்த 2019-ஆம் ஆண்டு தெலுங்கானாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வியடையக் காரணமான ‘குளோபரினா’ (Globarena) என்ற நிறுவனமே, தற்போது ‘கோயம்ப்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிபிஎஸ்இ ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதற்கான பின்னணி சோதனைகள் ஏன் செய்யப்படவில்லை? மோடி அரசுக்கும் இந்த நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி, இதற்கு முறையான நீதிமன்ற விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் சிபிஎஸ்இ இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அனைத்து விதிகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு தகுதியான நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகிய கல்வி நிறுவனங்களின் உதவியை சிபிஎஸ்இ நாடியுள்ளது.
முறைகேடுகளை சுட்டிக்காட்டினால் தனிப்பட்ட முறையில் தாக்குவதா?
மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தோடு விளையாடும் இத்தகைய தொழில்நுட்பத் தவறுகள் கண்டிக்கத்தக்கவை. முறைகேடுகளைச் சுட்டிக்காட்டும் மாணவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதைத் தவிர்த்து, தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்வதே மத்திய அரசின் கடமையாகும். கல்வித்துறையின் வெளிப்படைத்தன்மையே நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்.
