ஜார்ஜியா,ஜூன்.01; அமெரிக்காவில் அரங்கேறியுள்ள ஒரு நெஞ்சை உருக்கும் சோகம் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண்ணை கரம் பிடித்து, தன் திருமண வரவேற்பு கொண்டாட்டத்தை முடித்த சில மணி நேரங்களிலேயே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் விமானி ஒருவர் ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சில மணி நேரங்களில் துயரமாக மாறிய மகிழ்ச்சி கொண்டாட்டம்
டெல்டா ஏர்லைன்ஸ் (Delta Air Lines) நிறுவனத்தில் ஃபர்ஸ்ட் ஆபீசராக (First Officer) பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் பிஜி (Dave Fiji). இவருக்கும் இவருடைய நீண்ட நாள் காதலியான ஜெஸ்னி (Jesni) என்ற பெண்ணுக்கும் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள டாசன்வில்லில் (Dawsonville, Georgia) கடந்த வெள்ளிக்கிழமை (மே 29, 2026) இரவு மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. சுமார் 400 விருந்தினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, புதுமண தம்பதிகளுக்கு ஒரு சிறப்பான விடைபெறுதல் (Send-off) நிகழ்வாக ராபின்சன் ஆர்66 (Robinson R66) ரக ஹெலிகாப்டர் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் இருவரும் அந்த ஹெலிகாப்டரில் ஏறி டெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையத்தை (DeKalb-Peachtree Airport) நோக்கிப் புறப்பட்டனர். ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திருமண மண்டபத்திற்கு அருகில் இருந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
6 மணி நேரம் கணவனின் உடலருகே தவித்த மனைவி
இந்த விபத்தில் மணமகன் விமானி டேவ் பிஜி மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய மற்றொரு விமானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் சிதைவுகளைக் கண்டறிய பல மணி நேரம் ஆனது.
விபத்தில் படுகாயமடைந்த மணமகள் ஜெஸ்னி, சுமார் 6 மணி நேரம் அந்த இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்துள்ளார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தன் கணவர் டேவ் பிஜி தன் மார்பின் மீது சாய்ந்திருப்பதை அவர் பார்த்துள்ளார். ஜெஸ்னி ஒரு செவிலி (Nurse) என்பதால், டேவின் உடல் குளிர்ந்து போயிருந்ததையும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதையும் அவரே உறுதி செய்துள்ளார். தற்பொழுது ஜெஸ்னி லேசான காயங்களுடன் உயிர் பிழைத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோசமான வானிலையும் எச்சரிக்கையும்
டேவின் தந்தை ஜார்ஜ் பிஜி இதுகுறித்துக் கூறும்போது, “என் மகன் சிறுவயது முதலே விமானி ஆக வேண்டும் என்று கனவு கண்டான். திருமணத்தன்று அவன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான். ஆனால், ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்பாக, பனிமூட்டம் காரணமாக வானிலை மிக மோசமாக இருந்ததை என் மகன் கவனித்துள்ளான். ‘பார்வைத்திறன் பூஜ்யமாக (Zero Visibility) இருக்கும்போது நாம் பறக்கக் கூடாது’ என்று ஹெலிகாப்டர் விமானியிடம் என் மகன் எச்சரித்துள்ளார். ஆனால், அந்த விமானி அதிக உயரத்தில் பறக்கலாம் என்று கூறி ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மகிழ்ச்சியான மணவிழா சில மணி நேரத்தில் துயராக மாறிய அவலம்
விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. “கடவுள் எங்களுக்கு ஒரு அழகான திருமணத்தைக் கொடுத்தார், ஆனால் சில மணி நேரங்களிலேயே அது பெரும் துயரமாக மாறிவிட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடவுள் மட்டுமே எங்களுக்கு அமைதியைத் தர வேண்டும்” என்று டேவின் குடும்பத்தினர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். ஒரு மகிழ்ச்சியான திருமண விழா, சில மணி நேரங்களிலேயே மரண ஓலமாக மாறியிருப்பது அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
