சென்னை,ஜூன்.02; திருச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) ஆற்றியுள்ள எதிர்வினை தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி கூறிய ஜோசப் விஜய்
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெறுவோர் அதில் ஏதாவது ஒன்றில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதியாகும். அதன்படி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ஜோசப் விஜய் ராஜினாமா செய்தார்.
இருப்பினும், அத் தொகுதியில் தமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக அவர் நேற்று (ஜூன் 01, 2026) திருச்சிக்கு வந்தார். அங்கு அவர் ஆற்றிய நீண்ட உரை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பொறுப்பற்ற தற்பெருமை பேச்சு: அதிமுக ‘ஐடி விங்’ சாடல்
விஜய்யின் பேச்சுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் விஜய்யின் உரையை “சுயநல தற்பெருமை பேச்சு” என்று அதிமுக வர்ணித்துள்ளது. தான் வகிக்கும் மிக உயரிய முதலமைச்சர் பதவியின் பொறுப்பை உணராமல், மாநிலத்தில் நடக்கும் எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஜோசப் விஜய் பேசியிருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு தெரிந்ததா? இது சுயநல தற்பெருமை இல்லாமல் வேறென்ன?
“மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கைச் சீர்செய்ய காவல்துறை அதிகாரிகளை நியமித்துவிட்டால் மட்டும் போதுமா? நிர்வாகம் தானாகச் செயல்படுமா? இதெல்லாம் என்ன புது உருட்டாக இருக்கிறது?” என்று அதிமுக தங்களது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டம் – ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி
தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சியில் குற்றச் செயல்கள், மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சரின் பேச்சிலோ அல்லது முகத்திலோ எந்தவொரு கவலையோ, வருத்தமோ தெரியவில்லை என்றும், சட்டம் ஒழுங்கைச் சரிசெய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவரிடம் சுத்தமாக இல்லை என்றும் அதிமுக ஐடி விங் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளது.
“முந்தைய ஆட்சியைப் பழிபோடுவதா?” – குதிரை பேரக் குற்றச்சாட்டு
எல்லாத் தவறுகளுக்கும் முந்தைய ஆட்சியை மட்டுமே காரணம் காட்டுவது என்ன மாதிரியான அரசியல் மாற்றம் என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி, தவெக ஆட்சிக்கு வரக்கூடாது எனச் சதி செய்ததாகக் கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா என்றும் கேட்டுள்ளது.
“கத்தி பேசினால் அல்லது ‘கத்தி’ பட டயலாக் மாடுலேஷனில் பேசினால் பொய் எல்லாம் உண்மை ஆகிவிடாது” என்று திரைப்படப் பாணியையும் ஒப்பிட்டு அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்துக்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1 என்றும் அதிமுக ஐடி விங் கடுமையாக சாடியுள்ளது
மேலும், அதிமுக எம்.எல்.ஏ-க்களை அதிகார பலத்தால் விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தைப் பற்றி முதலமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக – தவெக இடையே போட்டி! உண்மைதான்..!!
தற்போதைய அரசியல் சூழலில் மக்களை ஏமாற்றுவதிலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதிலும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி நடப்பதாக அதிமுக கூறியுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதில் தவெக, திமுகவையே மிஞ்சிவிடும் போல் இருக்கிறது என்றும், எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்றும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பரிவு எச்சரித்துள்ளது.
தேர்தலுக்குப் பின்னரும் பரபரக்கும் தமிழ்நாடு அரசியல் களம்!
தமிழ்நாடு அரசியல் களம் 2026-ல் முற்றிலும் புதியதொரு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய்யின் ஆவேசப் பேச்சுகளுக்கு அதிமுக கொடுத்துள்ள இந்த அதிரடி எதிர்வினை, வரும் நாட்களில் இரு கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“உலகமே உங்களைச் சுற்றித்தான் இயங்குகிறது என்பது போல சும்மா புலம்பிக் கொண்டிருக்காதீர்கள்” என்ற அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் (ADMK IT Wing) இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
