Skip to content

தீபத்தூண் விசயத்தில் அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்தை முதலமைச்சர் ஆமோதிக்கிறாரா?: நயினார் நாகேந்திரன் கேள்வி!


சென்னை,ஜூன்.06; திருப்பரங்குன்றம் தீபத்தூண் விசயத்தில் அமைச்சர் நிர்மல்குமாரின் இந்து விரோத கருத்தை முதலமைச்சர் விஜய் ஆமோதிக்கிறாரா? என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தீபத்தூண் விவகாரத்தில் நிர்மல்குமாரின் கருத்துக்கு எதிர்ப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருப்பரங்குன்றம் விசயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையையே கடைப்பிடிப்போம் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், மாற்று சக்தி எனக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இந்து விரோத திமுகவின் சதிச் சுவடுகளையே பின்பற்றுவோம் என்று தவெக அமைச்சர் அறிவித்திருப்பது, தவெக ஒரு ஏமாற்று சக்தி என்பதையே நிரூபிப்பதாக விமர்சித்துள்ளார்.

இந்து மக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்க முயலுவதா?

இந்து மக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்க முயலும் அமைச்சர் நிர்மல்குமாரின் இந்தக் கருத்தை முதலமைச்சர் விஜய் ஆமோதிக்கிறாரா? இந்துக்களின் பண்பாட்டு உரிமையை பறிக்கும் விதமாக, நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிறாரா? தீய சக்தி திமுகவுக்கும் தூய சக்தி தவெகவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறாரா? என்று நாகேந்திரன் வினவியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் வழக்கம்போல இதற்கும் வாய் திறக்காமல் இருப்பதை விடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டைத் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *