தேனி,ஜூன்.11; தமிழ் சினிமாவின் யதார்த்தமான கிராமியப் பதிவுகளுக்கும், மண்வாசனை மாறாத கதைகளுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா, நேற்று (ஜூன் 10, 2026) சென்னையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவரது மறைவுச் செய்தி, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறுதி அஞ்சலி: கண்ணீர்க் கடலில் நனைந்த நீலாங்கரை இல்லம்
பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. செய்தி அறிந்த கணமே, ஆயிரக்கணக்கான ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்களும் அவரது முகத்தைப் பார்க்கத் திரண்டனர்.”என் இனிய தமிழ் மக்களே…” என்று கம்பீரக் குரலில் ஒலித்த அந்த மகா கலைஞனின் உடலைப் பார்த்து ரசிகர்கள் விம்மி அழுது அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் விஜய் அறிவித்தார்.
அஞ்சலி செலுத்த திரண்ட திரையுலகம்: “பாரதிராஜா இல்லை என்றால் நாங்கள் இல்லை”பாரதிராஜாவின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் கார்த்தி, நாசர், தனுஷ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் தனுஷ் அவரது உடலின் அருகே கண்ணீர் மல்க மௌனமாக நின்ற காட்சி காண்போரை உருகவைத்தது.
இயக்குனர் மிஷ்கின், “ஆலமரங்களுக்கு மரணமில்லை” என்று கூறி உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இசைத்துறையில் பாரதிராஜாவுடன் பல சாதனைகளைப் படைத்த கங்கை அமரன், “பாரதிராஜா என்றொருவர் இல்லையென்றால், இன்று நாங்கள் யாரும் இல்லை” என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.
திரையுலகமே திரண்டுவந்து அஞ்சலி; சமூக வலைதளங்களில் இரங்கல்
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.எஸ்.ராஜமௌலி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல முன்னணி திரை ஆளுமைகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் ஒரு நாள் படப்பிடிப்பு ரத்து!’இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாட்டில் அனைத்துத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புகள் (Shooting) முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் டிஜிட்டல் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன.
தேனியில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு இன்று (ஜூன் 11, வியாழன்) எடுத்து வரப்பட்டது. பெரியகுளம் அருகே காட்ரோடு என்ற பகுதியில் அமைந்துள்ள பாரதிராஜாவின் பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பின்னர் பாரதிராஜாவின் உடலுக்கு இன்று மாலை 3 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
பாரதிராஜா விதைத்த காவியங்கள் என்றும் அழியாமல் வாழும்
அழியாத காவியங்களின் நாயகன் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், மண்வாசனை, வேதம் புதிது, நாடோடித் தென்றால், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என தமிழ் சினிமாவை நான்கு சுவர்களுக்குள் இருந்து கிராமத்து மண்ணிற்கு அழைத்து வந்த பெருமை பாரதிராஜாவையே சாரும்.
தமிழ் திரையுலகிற்கு ராதிகா, ரேவதி, ராதா,ரேகா, ரதி அக்னிஹோத்ரி போன்ற எண்ணற்ற ‘R’ வரிசை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய அந்த மாபெரும் ஆளுமையின் உடல் மறைந்தாலும், அவர் தமிழ் நெஞ்சங்களில் விதைத்த காவியங்கள் என்றும் அழியாமல் வாழும்.
