கொல்கத்தா,ஜூன்.16; நாடாளுமன்ற வரலாற்றில் மிக முக்கிய அரசியல் திருப்பமாக, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியைச் சேர்ந்த 20 அதிருப்தி மக்களவை உறுப்பினர்கள் (MPs), திரிபுராவைச் சேர்ந்த யாருமே அறிந்திராத ‘தேசியவாத குடிமக்கள் கட்சி’ (NCPI – Nationalist Citizens Party of India) என்ற கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த இந்த எம்பிக்கள், தங்களின் இந்த முடிவு குறித்த கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். இந்த திடீர் நகர்வு கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளிக்கவும் எடுக்கப்பட்ட ஒரு தந்திரமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அதிரடி இணைப்பின் பின்னணி என்ன?
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் மற்றும் அதிருப்தியே இந்த பிளவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியாளர்கள் குழுவிற்கு முன்னாள் நாடாளுமன்ற கொறடா ககோலி கோஷ் தஸ்திதார் தலைமை தாங்குகிறார். நாடாளுமன்றத்தில் தங்களின் பதவிகளைப் தக்கவைத்துக் கொள்ள, அவர்கள் தேர்ந்தெடுத்த வழிதான் இந்த NCPI கட்சி.
இந்த தேசியவாத குடிமக்கள் கட்சி என்பது 2022 இல் தொடங்கப்பட்டு, 2023 திரிபுரா தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் தற்போது எந்தவொரு மாநிலத்திலும் ஒரு மக்கள் பிரதிநிதியைக் கூட கொண்டிராத ஒரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேட் (Letter Pad)கட்சியாகப் பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பலப்பரீட்சை: யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?
இந்த இணைப்பு சபாநாயகரால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால், அது நாடாளுமன்றத்தின் பல அமைப்பை கணிசமாக மாற்றியமைக்கும்:
மக்களவையில் என்டிஏ (NDA) பலம்: இந்த 20 எம்பிக்களின் ஆதரவோடு மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 294 லிருந்து 314 ஆக உயரும். இருப்பினும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு (Two-thirds majority) இன்னும் 46 இடங்கள் குறைவாகவே இருக்கும்.
மாநிலங்களவையில் தாக்கம்: மாநிலங்களவையிலும் ஆளுங்கட்சியின் பலம் 155 வரை உயரக்கூடும்.
திரிணாமுல் காங்கிரஸின் வீழ்ச்சி: மக்களவையில் 28 இடங்களைக் கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பலம் வெறும் 8 ஆகக் குறையும். மாநிலங்களவையிலும் அதன் பலம் 13 லிருந்து 10 ஆகக் குறைந்துள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டமும் சட்டச் சிக்கல்களும்
இந்திய அரசியலமைப்பின் 10ஆவது அட்டவணையின்படி (Anti-Defection Law), ஒரு கட்சியின் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு (2/3rd) உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைந்தால் மட்டுமே அவர்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்.
தற்போது திரிணாமுல் காங்கிரஸின் பெரும்பாலான எம்பிக்கள் இந்த குழுவில் இருப்பதால், அவர்கள் சட்டப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த சிறிய கட்சியை ஒரு பாலமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
உறுப்பினர்கள் தன்னிச்சையாக ஒரு பிரிவை உருவாக்க சட்டத்தில் இடமுண்டா?
இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் என்பது பிரிக்க முடியாத ஒரே கட்சி என்றும், உறுப்பினர்கள் தன்னிச்சையாக இப்படி ஒரு பிரிவை உருவாக்க சட்டத்தில் இடமில்லை என்றும் வாதிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் அடுத்ததாக நீதிமன்றத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களின் இந்த திடீர் முடிவு, மமதா பானர்ஜியின் தலைமைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், நேரடியாக பாஜகவில் இணையாமல் ஒரு சிறிய மாநிலக் கட்சி வழியாக என்டிஏ-விற்கு ஆதரவளிப்பது என்பது மேற்கு வங்கத்தில் உள்ள தங்களின் அரசியல் தளத்தை தக்கவைத்துக் கொள்ள அதிருப்தியாளர்கள் கையாண்ட ஒரு நுணுக்கமான அரசியல் நகர்வாகும். இதன் பின்னணியில் பாரதிய ஜனதாவின் கைகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். இந்த நாடாளுமன்ற சட்டப்போராட்டம் மற்றும் அரசியல் சதுரங்க வேட்டை வரும் நாட்களில் இந்திய அரசியலில் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
