Skip to content

“சைலன்ட் மோடிலிருந்து எப்போது வெளியே வருவீர்கள்?”; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி!

சென்னை,ஜூன்.16; சவாலும் சவடாலும் விட்டவர் சைலன்ட் மோடிலிருந்து எப்போது வெளியே வருவார்? என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றுள்ளது. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

6 மாதங்களுக்கு தவெக அரசை விமர்சிக்க மாட்டோம் என்று….

தேர்தல் தோல்விக்குப் பின்னர், சிறந்த ஆளுங்கட்சியாக இருந்த திமுக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆளும் தவெகவுக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என்றும், ஆறு மாதங்களக்கு அக்கட்சியை விமர்சிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளையும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவுகள் மூலம் தவெக அரசுக்கு எதிராக நாள்தோறும் கேள்விக் கணைகளை தொடுத்து வருகிறார்.

அந்த வகையில், அவர் இன்று (ஜூன் 16, 2026) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

அன்று சீறியவரின் காதுகளில் இன்று ஓலமிடுவோரின் குரல்கள் கேட்கவில்லையா?

அவர் தனது எக்ஸ் பதிவில், “Efficient (திறமையான) ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்”, “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு நாள்தோறும் வெளியாகும் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது கிடைக்கும்?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றி குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

சவாலும்-சவடாலும் விட்டவர், எப்போது Silent Mode-இல் இருந்து வருவார்?

சவாலும் -சவடாலும் விட்டவர் (முதலமைச்சர் ஜோசப் விஜய்), எப்போது Silent Mode-இல் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிட்ட நிலையிலும், தான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கின்றீர்களா? என்று முன்னாள் முதலமைச்சர் வினவியுள்ளார்.

இல்லையெனில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? என்றும் தனது எக்ஸ் தளப் பதிவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *