Skip to content

நீட் மறுதேர்வு: மத்திய அரசின் தற்காலிக தடைக்கு எதிர்ப்பு; டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நி்றுவனம் வழக்கு!

டெல்லி,ஜூன்.17; நீட் மறுதேர்வு நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு விதித்துள்ள தற்காலிக தடை உத்தரவை எதிர்த்து பிரபல செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் (Telegram) டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. வரும் 21ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் நீட்-யுஜி (NEET-UG 2026) மறுதேர்வை ஒட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீட் மறுதேர்வும் மத்திய அரசின் இடைக்கால தடையும்

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற நீட் இளநிலை மருத்துவ தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை அடுத்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மறுதேர்வு முறைகேடுகள் மற்றும் போலி வினாத்தாள் விற்பனையைத் தடுப்பதற்காக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் ஜூன் 22 வரை தற்காலிக தடை விதித்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் (NTA – National Testing Agency) பரிந்துரையின் பேரில், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் பிரிவு 69A-வின்கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது ஏன்?

மத்திய அரசின் இந்த அவசர இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஒப்புக்கொண்டுள்ளார். அரசின் இந்த ஒட்டுமொத்த தடை நடவடிக்கை தங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக டெலிகிராம் தரப்பில் வாதிடப்படுகிறது.

’15 கோடி பயனாளர்களுக்கு தண்டனையா?’ – பாவெல் துரோவ் காட்டம்

மத்திய அரசின் இந்த தடையை டெலிகிராம் நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமான (CEO) பாவெல் துரோவ் (Pavel Durov) கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்: “முறைகேடு செய்பவர்களை விடுத்து, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண பயனாளர்களை அரசு தண்டிக்கிறது; இந்த தடை தேவையற்றது; வினாத்தாள் கசிவுப் பிரச்னைக்கு இது தீர்வாகாது, ஏனெனில் முறைகேடு கும்பல் எளிதாக வேறு செயலிகளுக்கு மாறிவிடுவார்கள்.” என்று துரோவ் தெரிவித்துள்ளார்.

மேலும், மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை (Message-editing feature) ஜூன் 30 வரை முடக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்வு முடிந்த பிறகு பழைய மெசேஜ்களை எடிட் செய்து, “வினாத்தாள் முன்பே கசிந்துவிட்டது” போன்ற வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்கவே இந்த எடிட் ஆப்ஷன் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) விளக்கம் அளித்துள்ளது.

மாணவர்களின் கல்வி பாதிப்பு மற்றும் வதந்திகள்

மறுபுறம், இந்த தற்காலிக தடையால் நீட் தேர்வுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன. கல்வி குறிப்புகள் (Study Notes), வழிகாட்டுதல்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு டெலிகிராம் குழுக்களை நம்பியிருந்த மாணவர்கள் தற்போது அவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், டெலிகிராமில் “Paper Leaked NEET”, “Private Mafia” போன்ற பெயர்களில் பல்லாயிரக்கணக்கில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்ததே இந்த கடுமையான நடவடிக்கைக்குக் காரணம் என மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தேர்வின் நம்பகத்தன்மையைக் காக்க அரசு இத்தகைய டிஜிட்டல் தடைகளை விதித்தாலும், இது போன்ற ஒட்டுமொத்த தள முடக்கம் தற்காலிகமானதே தவிர, முறைகேடுகளுக்கான நிரந்தர தீர்வல்ல என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்தே, இந்தியாவின் டிஜிட்டல் கொள்கை மற்றும் தளங்களின் சுதந்திரம் குறித்த அடுத்தகட்ட நகர்வு அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *