மும்பை,ஜூன்.17; மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் மக்களவை எம்பிக்களை தங்களது பக்கம் இழுக்க, ஆளும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆபரேஷன் டைகர்’: எம்பிக்களை விலைக்கு வாங்க சதி?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) கட்சியைச் சேர்ந்த சுமார் 7 முதல் 9 எம்பிக்களை தங்கள் பக்கம் இழுக்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு அரசியல் வட்டாரத்தில் ‘ஆபரேஷன் டைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து சிவசேனா (UBT) எம்பியும், உத்தவ் தாக்கரேவின் நம்பிக்கைக்குரியவருமான சஞ்சய் ராவத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: “பணம் மட்டுமே குறிக்கோள்; மகாராஷ்டிர எம்பிக்களை விலைக்கு வாங்க இன்று இரவே ரூ. 15 கோடி முன் பணமாக வழங்கப்பட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது; இது மிகவும் அதிர்ச்சியளிப்பதோடு, அருவருக்கத்தக்கதாகவும் இருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த பதிவில் அவர் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸையும் டேக் செய்துள்ளார். இதன் மூலம் எம்பிக்களை மாற்று முகாமிற்கு கொண்டு செல்ல ஒரு நபருக்கு மொத்தம் ரூ. 50 கோடி வரை பேசப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 15 கோடி அட்வான்ஸ் வழங்கப்படுவதாக சிவசேனா (UBT) தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
மீண்டும் உடைகிறதா உத்தவ் தாக்கரேவின் சிவசேனா?
கடந்த சில நாட்களாகவே உத்தவ் தாக்கரே தரப்பில் இருக்கும் எம்பிக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் ஷிண்டே குழுவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. அண்மையில் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், மொத்தமுள்ள 9 எம்பிக்களில் 4 பேர் மட்டுமே நேரில் கலந்து கொண்டனர். மீதமுள்ள எம்பிக்கள் சொந்த காரணங்களுக்காக வரவில்லை என்றும், அவர்கள் காணொளி வாயிலாக இணைந்ததாகவும் சஞ்சய் ராவத் மற்றும் அனில் தேசாய் ஆகியோர் விளக்கமளித்தாலும், கட்சியில் பிளவு உறுதி என்றே ஆளும் தரப்பு கூறி வருகிறது.
ஆளும் தரப்பின் 24X7 திறந்த கதவுகள்
இந்த விவகாரம் குறித்து பேசிய ஷிண்டே முகாமின் அமைச்சர் பிரதாப் சர்நாயக், “சிவசேனாவின் கதவுகள் 24 மணி நேரமும், 365 நாட்களும் திறந்தே இருக்கும்; சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கை மீதும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மக்கள் பணியின் மீதும் நம்பிக்கை உள்ள யார் வேண்டுமானாலும் எங்களுடன் இணையலாம்; அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், ஷிண்டே தரப்பு எம்.எல்.சி கிருபால் துமானே, 7 எம்பிக்களுடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறியுள்ளார். இருப்பினும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷைனா என்.சி பேசுகையில், “எந்தக் கட்சியையும் உடைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஷிண்டேவின் மக்கள் செல்வாக்கைக் கண்டு பயந்தே இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்று இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிவசேனாவில் மீண்டும் பிளவா?
கடந்த 2022-ஆம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே மற்றும் பல எம்.எல்.ஏக்கள் பிரிந்து சென்று உத்தவ் தாக்கரேவின் ஆட்சியைக் கவிழ்த்த வரலாற்றுச் சுவடு இன்னும் மறையாத நிலையில், தற்போது நாடாளுமன்ற எம்பிக்களையும் குறிவைத்து நடக்கும் இந்த ‘அரசியல் சதுரங்கம்’ மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 19 ஆம் தேதியன்று சிவசேனாவின் 60-வது ஆண்டு நிறுவன தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்குள் கட்சி மீண்டும் உடையுமா அல்லது உத்தவ் தாக்கரே தனது கோட்டையைக் காப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
