டெல்லி,ஜூன்.17; நீட் மறுதேர்வு வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு மோசடிகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு இந்தியாவில் ‘டெலிகிராம்’ (Telegram) செயலியை வரும் 22ஆம் தேதி வரை தற்காலிகமாக முடக்கியுள்ளது. இந்த அதிரடி உத்தரவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் தரப்பு வாதம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேஜஸ் காரியா (Justice Tejas Karia) தலைமையிலான விடுமுறைக் கால அமர்வு, இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனினும், டெலிகிராமுக்கு உடனடி இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெலிகிராம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முன்வைத்த முக்கிய வாதங்கள்:
கடுமையான நடவடிக்கை: சட்டவிரோத நீட் வினாத்தாள் தொடர்பான 900-க்கும் மேற்பட்ட லிங்க்குகளை (Links) மின்னஞ்சல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் டெலிகிராம் நீக்கியுள்ளது. அப்படியிருக்க, ஒட்டுமொத்த செயலியையும் முடக்கியது முறையற்றது.
பயனர்கள் பாதிப்பு: இந்தியாவில் 15 கோடிக்கும் (150 Million) அதிகமான பயனர்கள் உள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்விப் பொருட்களுக்காக இந்தச் செயலியை நம்பியுள்ளனர். இந்தத் தடையால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விதிமீறல்: அவசர கால விதியான தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Rules) விதி 9-ன் படி, உரிய அவசர நிலைக்கான காரணங்களை அரசு பதிவு செய்யவில்லை.
மத்திய அரசின் அதிரடி பதில்
மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த நடவடிக்கை ஒரே இரவில் எடுக்கப்பட்டது அல்ல என்று தெளிவுபடுத்தினார்.
தொடர் புகார்கள்: மே மாதம் முதலே டெலிகிராம் செயலியில் மோசடி நடப்பதாகப் புகார்கள் வந்தன. தங்களின் அமைப்பைச் சரி செய்யுமாறு டெலிகிராம் நிறுவனத்திடம் பலமுறை கோரியும் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர்.
விளம்பர மோசடிகள்: “PAPER LEAKED NEET”, “Re-NEET 2026”, “Private Mafia” போன்ற பெயர்களில் டெலிகிராமில் சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டு, மாணவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடைசி ஆயுதம்: சேனல்களைத் தனித்தனியாக முடக்குவது போதிய பலன் தராததால், மாணவர்களின் நலன் கருதி தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-ன்கீழ் ஒட்டுமொத்த தளத்தையும் தற்காலிகமாக முடக்குவது இறுதி முடிவாக எடுக்கப்பட்டது.
மெசேஜ் எடிட்டிங் (Message Editing) வசதி முடக்கம்
மத்திய அரசின் உத்தரவின்படி, ஜூன் 30 வரை இந்தியாவில் ஏற்கனவே பதிவிடப்பட்ட மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியையும் டெலிகிராம் முடக்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகு, பழைய தேதியிட்ட மெசேஜ்களை எடிட் செய்து, உண்மையான வினாத்தாளை உள்ளே நுழைத்து “தேர்வு எழுதப்படுவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்துவிட்டது” என்று போலியான ஆதாரங்களை உருவாக்குவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெலிகிராமைத் தடை செய்தது தவறு என வாதம்
டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பாவெல் துரோவ் (Pavel Durov) தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “தற்காலிகமாக இருந்தாலும் டெலிகிராமைத் தடை செய்தது ஒரு தவறு. இதனால் மோசடி செய்பவர்கள் வேறு செயலிகளுக்கு மாறிவிடுவார்களே தவிர, 15 கோடி சாதாரண பயனர்கள்தான் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு வதந்திகளுக்கும் மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க அரசு இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. எனினும், ஒரு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்காக ஒட்டுமொத்த தளத்தையும் முடக்குவது சரியா அல்லது தவறா என்ற விவாதம் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும்.
