டெல்லி,ஜூன்.19; கட்சியின் விதிகளுக்கு மாறாக செயல்பட்ட 20 அதிருப்தி எம்ம்பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அபிஷேக் பானர்ஜி, சபாநாயகரிடம் 20 மனுக்களை அளித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
சபாநாயகரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் பானர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 20 எம்பிக்கள் சபாநாயகரைச் சந்தித்து தங்களைத் தனிக்குழுவாக அங்கீகரிக்கக் கோரியுள்ளனர்.
பின்னர் தான், அவர்கள் ‘தேசியவாத இந்திய குடிமக்கள் கட்சி’ (NCPI – Nationalist Citizens Party of India) என்ற அதிகம் அறியப்படாத ஒரு கட்சியில் இணைந்துள்ளதாகக் கூறியது தெரியவந்தது. இப்படி ஒரு கட்சியின் பெயரை இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை; ஏன், அந்த எம்பிக்கள் கூட இதற்கு முன் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று விமர்சித்தார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிமுறைகள்
அபிஷேக் பானர்ஜி தனது மனுவில் அரசியலமைப்பின் 10-வது அட்டவணையை (Anti-Defection Law) சுட்டிக்காட்டியுள்ளார்: ஒரு உறுப்பினர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் அங்கீகாரத்தை அவராகவே முன்வந்து துறந்தால், அவர் எம்பி பதவியை இழக்க நேரிடும் என்பது சட்டம். “குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேறு புதிய கட்சியில் இணைவதாகக் கூறுவது சட்டப்படி செல்லாது.
அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஒரு கட்சியின் 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணையும் போது மட்டுமே கட்சித் தாவல் சட்டத்திலிருந்து விலக்கு பெற முடியும் என்ற விதியையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு, வேறு கட்சிக்கு தாவுவதா?
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வென்றுவிட்டு, தற்போது புதிய குழுவாகச் செயல்பட முயலும் அதிருப்தி எம்பிக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா இந்த 20 மனுக்களின் மீது எடுக்கும் முடிவைப் பொறுத்தே, இந்த எம்பிக்களின் அரசியல் எதிர்காலம் அமையும்.
