Skip to content

உலகக் கோப்பை கால்பந்து; குன்ஹா, வினிசியஸ் அபார ஆட்டம்; ஹைதியை வீழ்த்தி பிரேசில் மாபெரும் வெற்றி!

பிலடெல்பியா,ஜூன்.20; உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான குரூப் சி லீக் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஜூன் 20) காலை 6 மணிக்கு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பிரேசில் வீரர்களின் அசாத்திய ஆதிக்கம் ஆரம்பம் முதலே நிலவியது.

முந்தைய போட்டியில் மொராக்கோவிடம் டிராவைக் கண்டு ஏமாற்றமடைந்த ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணிக்கு, இந்த ஆட்டம் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாக இருந்தது. அதற்கு ஏற்றார்போல் பிரேசில் அணி முதல் பாதியிலேயே மூன்று கோல்களை அடித்து வெற்றியை உறுதி செய்தது.

முதல் பாதியிலேயே பிரேசிலின் கோல் மழை

போட்டி தொடங்கிய 23ஆவது நிமிடத்தில் பிரேசில் தனது முதல் கணக்கைத் தொடங்கியது. வினிசியஸ் ஜூனியர் அடித்த பந்தை ஹைதி கோல்கீப்பர் ஜானி பிளாசிட் தடுத்தார், ஆனால் மீண்டு வந்த பந்தை ஹைதி டிஃபென்டர் ஹேன்ஸ் டெல்க்ராயிக்ஸ் கிளியர் செய்ய முயன்ற போது, அது பிரேசில் வீரர் மேத்யூஸ் குன்ஹாவின் (Matheus Cunha) காலில் பட்டு கோல் வலையினுள் புகுந்தது.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில், வினிசியஸ் ஜூனியர் கொடுத்த துல்லியமான த்ரூ-பாஸை (Through ball) பெற்ற மேதியஸ் குன்ஹா, ஹைட்டி தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி பந்தை டாப் கார்னரில் மிக நேர்த்தியாக உதைத்து தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+3′), லுகாஸ் பாகுவெட்டா அனுப்பிய நீண்ட பாஸை லாவகமாகப் பெற்ற நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் (Vinícius Júnior) நிதானமாக ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியிலேயே பிரேசில் அணி 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.

ஹைதியின் போராட்டம் மற்றும் ரஃபின்ஹாவின் காயம்

இரண்டாவது பாதியில் ஹைதி அணி தனது தற்காப்பு ஆட்டத்தை பலப்படுத்தியது. பிரேசில் அணியின் மாற்று வீரராக களம் புகுந்த கேப்ரியல் மார்ட்டினெல்லி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஹைதி வீரர் டொமினிக் சைமன் அடித்த சக்திவாய்ந்த லாங்-ரேஞ்ச் ஷாட்டை பிரேசில் கோல்கீப்பர் அலிசன் பெக்கர் (Alisson Becker) மிகச் சிறந்த முறையில் தடுத்து நிறுத்தினார்.

பிரேசில் அணிக்கு இந்த வெற்ற மகிழ்ச்சிக்கு மத்தியில் ஒரு சிறிய கவலையும் ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர வீரர் ரஃபின்ஹா (Raphinha) ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்த 3-0 என்ற மாபெரும் வெற்றியின் மூலம் பிரேசில் அணி 4 புள்ளிகளுடன் குரூப் சி (Group C) பிரிவில் கோல் வித்தியாச அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில், தங்களின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய ஹைதி அணி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும் முதல் அணியாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *