லாஸ் ஏஞ்சல்ஸ்,ஜூன்.22; உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெல்ஜியம் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தை 0-0 என்ற கணக்கில் சமன் செய்த பிறகு, ஈரான் கால்பந்து அணி சோஃபி அரங்கின் (SoFi Stadium) ஆடை மாற்றும் அறையில் கைகளால் எழுதப்பட்ட நெகிழ்ச்சியான நன்றி கடிதம் ஒன்றை விட்டுச் சென்றுள்ளது.
அமெரிக்காவின் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா சிக்கல்களுக்கு மத்தியிலும், லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் மற்றும் அங்குள்ள ஈரான் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கடிதத்தில் ஈரான் அணி குறிப்பிட்ட உருக்கமான வரிகள்
ஈரான் கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய பெர்சியா முதல் இன்றைய நாகரிக ஈரான் வரை, ஈரானின் ஆன்மா எப்போதும் உயிர்ப்போடும் உறுதியோடும் உள்ளது; நாங்கள் பெருமையுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தோம், மரியாதையுடன் போட்டியிட்டோம், இப்போது கண்ணியத்துடன் விடைபெறுகிறோம்; லாஸ் ஏஞ்சல்ஸ் நகரே, உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி! இந்த 180 நிமிட ஆட்டங்களிலும் எங்களுக்காக தங்கள் இதயம், குரல் மற்றும் ஆன்மாவை அர்ப்பணித்த ஒவ்வொரு ஈரானியருக்கும் எங்களது நன்றி; அனைத்து நாடுகளுக்கு இடையேயும் அமைதி, மரியாதை மற்றும் நட்பு நிலவட்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்தக் கடிதத்தில் #168 மற்றும் #Minab ஆகிய ஹாஷ்டேக்குகள் இடம்பெற்றிருந்தன. இது ஈரான் போரின் போது மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளி மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 168 பேர் கொல்லப்பட்டதை நினைவூட்டும் விதமாக அமைந்திருந்தது.
கடுமையான கட்டுப்பாடுகளையும் தாண்டிய சாதனை
இந்த உலகக் கோப்பை தொடரில் ஈரான் அணி பல்வேறு அசாதாரண அரசியல் மற்றும் நிர்வாக சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக, ஈரான் வீரர்களால் அமெரிக்காவில் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேல் தங்கியிருக்க முடியவில்லை. இதனால் அவர்கள் மெக்சிகோவின் டிஜுவானா (Tijuana) பகுதியில் முகாம் அமைத்து தங்கி, போட்டி நடக்கும் நாளுக்கு முந்தைய இரவு மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைந்து, போட்டி முடிந்தவுடன் உடனடியாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதுகுறித்து பேசிய ஈரானின் பயிற்சியாளர் அமீர் காலேனோய் (Amir Ghalenoei), “நாங்கள் கடந்த ஆறு மாதங்களாக போர்ச் சூழலில் இருந்தோம்; எங்களுடைய உள்நாட்டு லீக் போட்டிகள் கூட நடக்கவில்லை; விசா தாமதங்கள், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட நட்பு ரீதியான போட்டிகள் என மிக மோசமான சூழ்நிலையிலேயே உலகக் கோப்பைக்கு வந்தோம்; இந்த இக்கட்டான சூழலிலும் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடையாமல் விளையாடியது எங்கள் கால்பந்து வரலாற்றில் ஒரு மைல்கல்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பெல்ஜியம் அணிக்கு எதிராக மிரளவைத்த ஈரான் கோல்கீப்பர்
குறிப்பாக பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் அவ்வணி மேற்கொண்ட 7 கோல் வாய்ப்புகளை முறியடித்த ஈரானின் நட்சத்திர கோல்கீப்பர் அலிரேசா பெய்ரான்வண்ட் (Alireza Beiranvand) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பதற்றங்கள் மற்றும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விளையாட்டு வீரர்களைப் பாதிக்கலாம், ஆனால் விளையாட்டின் ஆன்மாவையும் ரசிகர்களின் அன்பையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஈரான் அணி நிரூபித்துள்ளது. நியூசிலாந்துடன் 2-2 என்ற கணக்கிலும், பெல்ஜியத்துடன் 0-0 என்ற கணக்கிலும் சமன் செய்துள்ள ஈரான் அணி, தற்போது குரூப் ஜி (Group G) பிரிவில் 2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தனது அடுத்த மற்றும் கடைசி லீக் போட்டியில் எகிப்து அணியை எதிர்கொள்ள சியாட்டில் (Seattle) நகருக்கு ஈரான் அணி பயணமாகிறது.
