சென்னை,ஜூன்.23; தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன்பின்னர், 19 மற்றும் 22ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.
அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போன்றே ஆக்ஷன் செய்து ஜோசப் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் விவாதம்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், “சட்டம் ஒழுங்கு குறித்து யார் கருத்து தெரிவித்தாலும் அதற்கு நாங்கள் காது கொடுப்போம். இது மன்னர் ஆட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்களாட்சி. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு நாங்கள் இப்போதுதான் விடை கண்டு வருகிறோம். போதைப்பொருள் நடமாட்டத்தை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியது யார்?” என்று கேள்வி எழுப்பினார்.
“5 நிமிட பேச்சிற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டது”
திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் விஜய், வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் தொகுதி ஆட்டம் கண்டுவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், மக்கள் பணத்தைச் சுரண்டுபவர்களைத் தங்களது அரசு ஒருபோதும் சும்மா விடாது என்றும், தவெக அரசு மக்கள் பணத்தைத் தொடாது, யாரையும் தொடவும் விடாது என்றும் உறுதியளித்தார்.
திமுக தயவால் ஆட்சியா? முதலமைச்சர் விஜய் விளக்கம்
“தவெக அரசு திமுகவின் தயவால் தான் நடக்கிறது என்று ஒரு புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். ஆனால், இந்த ஆட்சி யாருடைய தயவாலும் நடக்கவில்லை; மக்களின் தயவாலும், மனசாட்சி உள்ள சக்திகளின் ஆதரவாலும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. நாம் யாருடைய ‘பி-டீமும்’ (B-Team) கிடையாது, நாம் முழுக்க முழுக்க மக்களின் டீம் (Purely People’s Team)” என்று மேசையைத் தட்டிப் பேசினார்.
அமைச்சரவையில் சமூகநீதி: புள்ளிவிவரங்களுடன் அதிரடி
எதிர்க்கட்சிகளின் சமூகநீதிப் பேச்சுகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர், “சமூகநீதி அரசு என்று சொல்லிக்கொண்டவர்களின் அமைச்சரவையில் எத்தனை பட்டியலின அமைச்சர்கள் இருந்தார்கள்? எங்களுடைய தற்போதைய அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்களும், 8 பட்டியலின அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் அண்ணல் அம்பேத்கரின் கனவு நனவாகியுள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையை அதிரவைத்த “Evils, Evils” செய்கை!
பதிலுரையின் நிறைவாக, கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், “Evils, Evils என்று Devils பேசக்கூடாது” எனக் கூறி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு செய்த செய்கையை (Action) அப்படியே சட்டப்பேரவையில் செய்து காட்டினார்.
“கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்க்க மாட்டோம்”
மத்திய அரசுடன் கண்ணை மூடிக்கொண்டு மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தவெக அரசு செயல்படும் என முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே வேளையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குச் சட்டப்பேரவையில் அவர் காட்டிய ஆக்ஷனும், கொடுத்த பதிலடியும் தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
