சென்னை,ஜூன்.27; போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன், தமிழ்நாடு முழுவதும் தீவிர தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை (ஜூன் 28, 2026, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. சென்னை பாலவாக்கத்தில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று, இம்முகாமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார்.
பாலவாக்கத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி மாநில அளவிலான இந்த இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, பாலவாக்கம் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான முன்னேற்பாட்டுப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
43,051 போலியோ சொட்டு மருந்து மையங்கள்
இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 வயதிற்குட்பட்ட சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் முக்கிய பொதுஇடங்கள் என மொத்தம் 43,051 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் நாளை காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து செயல்படும்.
நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் தற்காலிக மையங்கள்
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் (Toll plazas), சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் (Transit Booths) அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான ஜூன் 28 அன்று அனைத்து முகாம்களிலும், அதனைத் தொடர்ந்து ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தற்காலிக மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படும்.
மேலும், மலைப்பகுதிகள், தொலைதூரக் கிராமங்கள் மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்காகச் சிறப்பு நடமாடும் மருத்துவக் குழுக்கள் (Mobile Medical Teams) களமிறக்கப்பட்டுள்ளன.
2 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள்
இந்த மாபெரும் மருத்துவப் பணியில் 2 லட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை நிமித்தமாக வந்து தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த முகாம்களில் முன்னுரிமை அளித்து போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி (National Immunization Schedule), உங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், இந்த முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்குவது அவசியமாகும்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்து அவசியம்
உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்திருந்தாலும், அண்டை நாடுகளில் இதன் தாக்கம் இன்னும் நீடிப்பதால், நம் குழந்தைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
எனவே, 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி, ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்நாட்டை உருவாக்கப் பெற்றோர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
