சென்னை,ஜூன்.29; அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பேரிடியாக அவரது கட்சியைச் சேர்ந்த மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினரும் பதவி விலகி உள்ளார். கரூர் தொகுதி எம்எல்ஏ-வான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (ஜூன் 29, 2026)சட்டப்பேரவைத் தலைவர் J.C.D. பிரபாகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் பதவி விலகியதால் இடைத்தேர்தல்
இதுபோன்ற சூழலில், அதிமுக சார்பில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினர் தங்களது எம்எல்ஏ பதவிகளிலிருந்து விலகியதால் அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இவை தவிர்த்து தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வென்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்துவிட்டதால், அதனையும் சேர்த்து மொத்தம் 6 தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்கவிருக்கின்றன.
கரூர் அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பதவி விலகல்
இந்நிலையில், மேலும் ஒரு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். கரூர் தொகுதி எம்எல்ஏவும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (ஜூன் 29, திங்கள்) தலைமைச் செயலகத்திற்கு வந்து, பேரவைத் தலைவர் J.C.D. பிரபாகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இவரும் தவெகவில் இணையவிருப்பதாகப் பேசப்படுகிறது.
அதிமுகவிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விலகியதன் மூலம் சட்டப்பேரவையில் அக்கட்சி உறுப்பினர்களின் பலம் 47-ல் இருந்து 41ஆகக் குறைந்துள்ளது.
ஒருவர் பின் ஒருவராக பதவி விலகுவதால் இபிஎஸ் அதிர்ச்சி
இவ்வாறு ஒவ்வொரு எம்எல்ஏவாக அதிமுகவை விட்டு வெளியேறுவது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமின்றி, அதிமுகவினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா ஏற்பு: பேரவைத் தலைவர் பிரபாகர்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சட்டப்பேரவை விதி 21-ன் படி கரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தமது கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்; அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டப்பேரவை விதி 22-ன் படி முறையாக உள்ளதால் அதனை தான் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து கரூர் தொகுதியும் காலியானதாக விரைவில் அறிவிக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக உயரும். விரைவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் கரூர் தொகுதியும் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகி வருவது அந்தந்த தொகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
