என்எல்சி 3% பங்கு விற்பனைக்கு எதிராக நெய்வேலியில் போராட்டம்
ஒன்றிய அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் கண்டனம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில், என்எல்சி (NLC) நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ததைக் கண்டித்தும், அந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெய்வேலி எட்டு ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மாநிலத் தலைவர்கள் பங்கேற்பு
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும், என்எல்சி நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பான முடிவை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
என்எல்சி பங்கு விற்பனை விவகாரம் கவனம்
தமிழ்நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சி தொடர்பான பங்கு விற்பனை விவகாரம் அரசியல் மற்றும் தொழிற்சங்க வட்டாரங்களில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கவனத்தை ஈர்த்துள்ளது.
