தமிழக அரசியலில் அரசு வேலை வழங்கும் விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த அரசியல் கட்சியிலும் தலைவர்களுக்காக அல்லது கட்சிக்காக தொண்டர்கள் தியாகம் செய்தால், ஆளும் கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு வேலை வழங்கிய வரலாறு இல்லை. ‘ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க விஜய்'” என்று விமர்சித்தார்.
மேலும், மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி அரசியல் கட்சியை வளர்க்க முயற்சித்தால், அதை தமிழக இளைஞர்கள் ஏற்க மாட்டார்கள். அதற்கு எதிராக நியாயம் கேட்டு போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அரசு நலத்திட்டங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்றும், அவை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரூர் சம்பவம் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அரசு தரப்பில் இந்த விமர்சனங்களுக்கு அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்த அரசியல் எதிர்வினைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
