‘யானைக் காதல்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பசுமைத் தாயகம் தலைவர் மற்றும் எம்எல்ஏ சௌமியா அன்புமணி, பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை இந்த நூல் ஆழமாக பதிவு செய்திருப்பதாக பாராட்டினார்.
விழாவில் உரையாற்றிய அவர், “இந்த நூலில் அற்புதமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக குரல் இல்லாதவர்களின் குரலாகவும், பழங்குடியின மக்களின் வாழ்வியல், காடுகளுடனான உறவு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் மிக முக்கியமான பதிவுகள் இடம்பெற்றுள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும், பழங்குடியின மக்களுக்கு தரமான கல்வி, மருத்துவ வசதி, குடிநீர், சாலை, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை பாதுகாப்பதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
‘யானைக் காதல்’ நூல், காடுகள், வனவிலங்குகள், மனிதர்கள் மற்றும் பழங்குடியின சமூகங்களின் உறவை பதிவு செய்யும் முக்கியமான படைப்பாக பலரும் பாராட்டினர். இந்த நூல் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதிலும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
