பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் VIP வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும்
தமிழக கோயில்களில் VIP தரிசனம் மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. பக்தர்களின் வழக்கமான தரிசனத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் முக்கியப் பிரமுகர்களின் வருகையை கோயில் நிர்வாகங்கள் ஒழுங்குபடுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் கோயில்களுக்கு வருகை தருவது குறித்து குறைந்தது ஒருநாள் முன்னதாகவே கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை
VIP தரிசனத்தின்போது முக்கியப் பிரமுகர்களை கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், VIPக்கள் வருகையின்போது கோயிலின் புனிதத்தன்மை, மரபுகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து கோயில்களிலும் நடைமுறைப்படுத்த உத்தரவு
பக்தர்களின் தரிசனத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், முக்கியப் பிரமுகர்களின் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும் என அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், VIP வருகை தொடர்பாக அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
