குருகிராமில் வைரலான வித்தியாசமான WFH சம்பவம்
காரின் கூரையில் அமர்ந்து வேலை பார்த்த நபர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் குருகிராமில் கனமழையால் சாலைகளில் கடும் வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அலுவலகம் செல்ல முடியாமல் சிக்கிய நபர் ஒருவர் தனது வாடகை காரின் கூரை மீது அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்துள்ளார்.
குருகிராமில் கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இந்த சூழலில் அலுவலகம் சென்று கொண்டிருந்த அந்த நபரின் கேப் நீரில் சிக்கியதாகவும், இதையடுத்து அவர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து Work From Home (WFH) முறையில் பணிபுரியத் தொடங்கியதாகவும் சமூக வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரே ஆனது தற்காலிக அலுவலகம்!
வாகனங்கள் நகர முடியாத நிலையில், அந்த நபர் காரின் கூரை மீது ஏறி அமர்ந்து லேப்டாப்பை திறந்து அலுவலகப் பணிகளை மேற்கொண்டார். மேலும், அவர் அலுவலக அழைப்புகளிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்சியை பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இணையத்தில் வைரலான வீடியோ
இந்த சம்பவத்தின் வீடியோவை X தளத்தில் லக்ஷய் மேத்தா என்பவர் பகிர்ந்துள்ளார். “WFH-க்கு இதுவும் ஒரு லெவல்” என்ற வகையில் நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை நகைச்சுவையாக பகிர்ந்து வருகின்றனர். குருகிராமில் ஏற்பட்ட கடும் நீர்த்தேக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், வேலைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என அந்த நபர் எடுத்த முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
குருகிராமில் ஏற்பட்ட கனமழை மற்றும் நீர்த்தேக்கம் காரணமாக அலுவலகங்கள் Work From Home முறையை பின்பற்றுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
