மும்பை: ஐபிஎல் மினி ஏலம் நெருங்கி வரும் நிலையில், சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான மெகா ‘டிரேட்’ பேச்சுவார்த்தை குறித்து ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மும்பை இந்தியன்ஸ் அணி யாருக்கும் தெரியாமல் ஒரு முக்கியமான வீரரை ஒப்பந்தம் செய்து, ‘சைலண்ட் சம்பவம்’ செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் சிஎஸ்கே-வின் முன்னாள் வீரர் ஒருவர்தான் மும்பை அணிக்குள் வந்துள்ளார்.
அஸ்வின் உடைத்த ரகசியம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கடந்த சீசனில் ஆடிய இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் மூலம் வாங்கியுள்ளதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் வெளிப்படையாகக் கூறியதன் மூலம் இந்த ரகசியம் அம்பலமானது.
- கடந்த சீசனில் மாற்று வீரராக லக்னோ அணியால் வாங்கப்பட்ட ஷர்துல் தாக்கூரை, ரூ.2 கோடிக்கு மும்பை அணி டிரேட் மூலமாக வாங்கியுள்ளதாக அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
- தீபக் சஹார் அடிக்கடி காயமடையும் வாய்ப்பு இருப்பதால், அவருக்கான மாற்று வீரராகவும், அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கவும் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பும்ரா, தீபக் சஹார், அஸ்வனி குமார் போன்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கும் நிலையில், உள்ளூர் வீரரான ஷர்துல் தாக்கூரின் வருகை மும்பை அணியின் பந்துவீச்சு பலத்தை மேலும் அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
சிஎஸ்கே – ராஜஸ்தான் மெகா டிரேட்: பின்னணி என்ன?
நவம்பர் 15-ஆம் தேதிக்குள் ஐபிஎல் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட வேண்டும். டிரேட் செய்வதற்கான கால அவகாசமும் முடிவடைய உள்ளதால், சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான பெரிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை உச்சக்கட்டத்தில் உள்ளது.
- ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனையும், சிஎஸ்கே அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகிய இருவரையும் இந்த டிரேட் ஒப்பந்தத்தின் மூலம் இரு அணிகளும் பரிமாறிக் கொள்ளப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- சிஎஸ்கே-வின் ஐகானிக் வீரர்களில் ஒருவரான ஜடேஜா டிரேட் செய்யப்படவிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சனின் உடற்பயிற்சி ஆலோசகர் ராஜாமணி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்வதை மறைமுகமாக உறுதி செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை வாங்கியதை விடவும், சிஎஸ்கே-ராஜஸ்தான் ஒப்பந்தம் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய டிரேட் ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக 11 ஆண்டுகளும், ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக 12 ஆண்டுகளும் விளையாடியுள்ளனர். இந்த மெகா டிரேட் ஒப்பந்தத்திற்கு இடையேதான், ஷர்துல் தாக்கூரை மும்பை அணி ரகசியமாக இழுத்து, தனது பலத்தை அதிகரித்துள்ளது.
