Skip to content

சிறையில் என்னைக்கொல்ல சதி: இம்ரான் கான்

ராவல்பிண்டி, டிச.03; அடியாலா சிறையில் “என்னை கொல்ல சதி நடக்கிறது” என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி உள்ளார். ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரானை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரானின் 5 சகோதரிகள் மற்றும் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகளில் ஒருவரான உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறைக்குச் சென்று இம்ரானை சந்தித்தார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த உஸ்மா, சிறையில் இம்ரான் நலமாக உள்ளார்; ஆனால், அவருக்கு மனரீதியிலான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது என குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான் கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது. அதில், “பாகிஸ்தான் ராணுவத்திற்கு என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி, எனது உயிருக்கு ஆபத்து உள்ளது; மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் தான் சிறையில் உள்ளேன்; எனக்கு ஏதாவது நேர்ந்தால் ராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜியும் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். அதிர்ச்சிகரமான தகவல்களைக் கொண்டுள்ள இம்ரான் கானின் இந்த அறிக்கை பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *